தமிழ் மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகள், தீர்வுகள் தொடர்பாக அரசு மெத்தனப் போக்கில் செயற்படுகிறது – இரா.சம்பந்தன்

Written by vinni   // January 28, 2014   //

r.sampanthanபோர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலும் வலி.வடக்கு மற்றும் சம்பூரைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர்.

அவர்களை குடியேற்றுவதாகப் பலமுறை அரசு நாடாளுமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தும் அதனை நிறைவேற்றாமல் உள்ளது.   அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் என்பன இடித்து அழிக்கப்பட்டு இராணுவ ஆக்கரமிப்புக்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.   தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக அரசின் மெத்தனப் போக்குக்கு எதிரான தீர்மானம், வடமாகாண சபை குறித்தும் 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற வரவு – செலவுதிட்டத்தை தோற்கடித்த தமது கட்சி உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டன.

போர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் பத்தா யிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர்.   அரசு தமிழ் மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகள், தீர்வுகள் தொடர்பாக மெத்தனப் போக்கில் செயற்படுகிறது.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் இனப்பரம்பலை மாற்றி தமிழ் மக்களின் பூர்வீகப்  பகுதிகளை பெரும்பான்மை இன பிரதேசமாக மாற்றும் அரசின் திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:   தமிழர் பகுதிகளில் அதிகமான இராணுவப்பிரசன்னம் இருப்பதனால் மக்களின் வாழ்வாதாரம், சுதந்திரமான நடமாட்டம், பெண்களின் பாதுகாப்பு, சுயமரியாதை போன்றவற்றுக்கு, அசெளகரிகமாக உள்ளது. அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். போரின் இறுதிக் கட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அரசு எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை – என்றார்.


Similar posts

Comments are closed.