இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் – அமெரிக்கா

Written by vinni   // January 28, 2014   //

american-flag-2aஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்பதனை அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும், யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியான விசாரணைகளை வலியுறுத்தியா இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது பற்றிய தகவல்களை அமெரிக்கா திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் திருப்தி அடையாத காரணத்தினாலேயே அமெரிக்கா மூன்றாம் தடவையாகவும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி இம்முறை தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என இலங்கை அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை சமாளிக்கும் பாரியளவில் ராஜதந்திர தந்திரோபாயங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாகவே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நாட்டின் அபிவிருத்தி குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி, தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள லலித் வீரதுங்க முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.