ஐ.சி.சி நிர்வாக அமைப்பு மாற்றம்: முன்னாள் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

Written by vinni   // January 27, 2014   //

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் நாளையும் (28–ந்தேதி), நாளை மறுநாளும் (29–ந்தேதி) துபாயில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஐ.சி.சி.யின் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்களை கவனிக்கும் கமிட்டி சார்பில் ஐ.சி.சி. நிர்வாக விவகாரங்களில் சில மாற்றங்களை கொண்டு வரும் வகையில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த வரைவு திட்டத்தில் ஐ.சி.சி விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

download (3)மேலும் அதிக வருவாய் தரும் வாரியங்களுக்கு அதற்கு ஏற்ற வகையில் ஐ.சி.சி வருவாயை கணிசமாக பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

ஐ.சி.சி.யின் இந்த புதிய வரைவு திட்டத்துக்கு தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்பட சில நாட்டு வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஐ.சி.சி.யின் 10 குழு உறுப்பினர்களில் 7 பேர் ஆதரவு கிடைத்தால் இந்த திட்டம் நிறைவேறும்.

ஐ.சி.சி நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படும் இந்த முடிவுக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், முன்னாள் ஐ.சி.சி மேட்ச் நடுவருமான கிளைவ் லாயிட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வரைவு திட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அவர் ஐ.சி.சி. தலைவர் ஆலன் ஈசாக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல ஐ.சி.சி. முன்னாள் தலைவர்கள் மால்கம் கிரே (ஆஸ்திரேலியா) ஈசன் மணி (பாகிஸ்தான்) மற்றும் மால்கம் ஸ்பிடு ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.