இத்தாலி பெண் மந்திரி ராஜினாமா : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்

Written by vinni   // January 27, 2014   //

b2e10be2-5bee-4e12-b9b0-c856f5aa754e_S_secvpfஇத்தாலியின் பிரதமர் என்ரிகோ லெட்டாவின் பலவீனமான கூட்டணி அரசில் விவசாயத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் நுன்சியா டி கிரோலமோ.

இவர் சமீபத்தில் கம்பனியா பகுதியில் உள்ள பெனவெண்டோ நகரத்தில் அரசு சார்ந்த சுகாதார அதிகாரிகளை நியமனம் செய்தார். இந்த நியமனத்தில் அவர் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தியது, கடந்த 2012-ம் ஆண்டில் இந்த நியமனம் குறித்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்பட்டதில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரையில் இத்தாலியின் விவசாயத்துறை முதலீட்டிற்காக ஐரோப்பிய யூனியன் 12.18 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி உதவிகளை அளித்திருந்தது.

இந்த நிதி உதவியிலிருந்து விநியோகிக்கப்பட்ட தொகை குறித்து முரண்பாடான விபரங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளதாகப் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி மீதமுள்ள தொகையை 51 சதவிகிதப் பங்குகளை அரசே வைத்திருக்கும் ஏஜிஈஏ நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்வதென்பது அரசுக்கு கடும் சவாலாக இருந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நிதி விநியோகம் குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் சனிக்கிழமை அன்று விவசாயத்துறை அமைச்சகத்தின் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் அடங்கிய ஊடகத் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று விவசாயத்துறை அமைச்சரான கிரோலமோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரதமர் என்ரிகோவின் கூட்டணி அமைச்சரவையிலிருந்து பதவி விலகும் இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை தற்போது அவர்மீது எந்தவித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்றபோதிலும் தனக்கு முந்தைய பதவிக்காலம் குறித்த விசாரணையில் காவல்துறை இறங்கியுள்ளதாக சனிக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கிரோலமோ குறிப்பிட்டிருந்தார்.


Similar posts

Comments are closed.