ஜெனிவாவில் பாரிய இராஜதந்திரப் போருக்குத் தயாராகிறது சிறிலங்கா

Written by vinni   // January 27, 2014   //

srilanka flgசிறிலங்காவுக்கு எதிராக வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கு பெரியளவிலான இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக சமூகத்திடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், ஜெனிவாவில் இந்த தீர்மானத்துக்கு எதிரான மிகப்பெரியளவிலான பரப்புரைகளில் ஈடுபட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜெனிவாவில் இந்தப் பரப்புரைகள், சிறிலங்கா அதிபரின் செயலரும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய திட்டத்துக்குப் பொறுப்பானவருமான லலித் வீரதுங்க தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னதாக, சுமார் 90 கூட்டங்கள், சந்திப்புகளை நடத்தி, இலங்கைக்கு ஆதரவு தேடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் மனிதஉரிமை விவகாரங்களைக் கவனிப்பதற்காக தனி அலகு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.