வடமாகாணத்தில் பிரபல பாடசாலைகளை அழிப்பதற்குத் திட்டம்!

Written by vinni   // January 26, 2014   //

Schoolgirlsவடக்கு மாகாணத்தின் கல்விநிலை சற்று உயரத் தொடங்கியுள்ளது. இதனை ஏற்றக்கொள்ள முடியாத சில விசமிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் பிரபல பாடசாலைகளை அழிப்பதற்கு சுற்று நிருபங்களைக்கூட தவறாகப் பயன்படுத்துவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி மிகவும் புகழ் பூத்த கல்லூரி. இதுவொரு 1AB பாடசாலையாகும். இதற்கு அதிபராக நியமனம் பெறுபவர் கல்வி நிர்வாக சேவையைச் சார்ந்தவராகவும், அதிபர் சேவைத் தரம்:1இல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

மாறாக தற்போது அதிபர் சேவைத் தரம்:1இல் கடமையாற்றியவர் இளைப்பாறிய பின்னர், அதிபர் சேவைத் தரம் உறுதிப்படுத்தப்படாத அதிபர் சேவை.2: :II தரத்தில் மேலதிக ஆளணியினர் வகை சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான விண்ணப்பத்தினை வலயக்கல்வித் திணைக்களம் கோரிய போது பொருத்தமானவர்கள் விண்ணப்பிக்காததால், மாகாணக் கல்வித் திணைக்களம் விண்ணப்பம் கோரியது. அதற்கு ஏற்கனவே விண்ணப்பித்து பொருத்தமற்றவர்கள் என வலயக்கல்வித் திணைக்களம் அறிவித்த இருவர் உட்பட கல்வி நிர்வாக சேவையைத் தரமுள்ள ஒருவருமாக மூவர் விண்ணப்பித்திருந்தனர்.

கல்வி நிர்வாக சேவைத்தரமுள்ளவரை நேர்முகப் பரீட்சைக்கே அழைக்காமல் மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்த வேண்டிய நேர்முகத்தேர்வினை வலயக்கல்வித் திணைக்களமே நடாத்தி தற்போது மேலதிக ஆளணி வகைசார்ந்த ஒருவரை வடமாகாணக் கல்வி அமைச்சு நியமனம் செய்துள்ளது.

வடமாகாணத்தில் உள்ள சேவை.2: :II தரத்தில் மேலதிக ஆளணியினர் வகை சார்ந்த பலர் பல பாடசாலைகளுக்கும் விண்ணப்பித்தும் அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.

இதே வேளை யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அதிபர் வெற்றிடமேற்பட்ட 1C பாடசாலை ஒன்றிற்கு விண்ணப்பங்கள் கோரி நேர்முகப் பரீட்சைகளும் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பமே செய்யாத ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

இதைவிட வடமாகாணத்தில் உள்ள இரு பாடசாலைகளின் அதிபர் விவகாரம் உயர் நீதிமன்றம்வரை சென்றுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய விடயமாகும்.

இதைவிட ஏற்கனவே இரண்டு பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் மேலும் உயர் பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஒட்டுமொத்தத்தில் வடபுலத்து கல்வியை பாழாக்கும் விசமிகளுக்கு இங்குள்ள சில அதிகாரிகள் பதவிமோகத்தினால் பலியாவதாக பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.

இது விடயத்தில் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் பலரிடமும் பலரும் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று பொதுமக்களும், கல்விப்புலம் சார்ந்தவர்களும் விசனமடைந்துள்ள அதேவேளை, மாகாண அமைச்சர்களின் பங்கையும், பணிகளையும் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர் என்றுள்ளது.


Similar posts

Comments are closed.