ஆணைக்குழுவிடம் வடக்கு, கிழக்கில் போரின் போது 13,700 பேரைக் காணவில்லை என‌ முறைப்பாடு

Written by vinni   // January 26, 2014   //

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniyaகாணாமற்போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு இதுவரை 13,700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில், போரின் போது காணாமற்போனவர்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழுவிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 9,300 முறைப்பாடுகள் பொதுமக்கள் தொடர்பானவையாகும்.

ஏனைய 4300 முறைப்பாடுகள் சிறிலங்கா படையினர் தொடர்பானவை.

கிளிநொச்சியில் கடந்த 18ம் நாள் தொடக்கம் 21ம் நாள் வரை நடத்தப்பட்ட ஆணைக்குழுவின் முதல் விசாரணை அமர்வை அடுத்து, அந்தப் பகுதியில் காணாமற்போன 162 பேர் தொடர்பான சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமரப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் காணாமற்போனவர்கள் தொடர்பான 76 முறைப்பாடுகள் குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், 106 புதிய முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி அமர்வில் காணாமற்போன 440 பேர் தொடர்பாக சாட்சியமளிக்க வந்திருந்த போதிலும், அனைவரிடமும் சாட்சியங்களை பதிவு செய்ய நேரம் போதவில்லை என்றும், அடுத்த கட்டமாக அங்கு சாட்சியங்களை பதிவு செய்ய ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணாமற்போனவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் மீதான நடவடிக்கையின் நிலை என்னவென்பதை உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக விரைவில் இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.