இலங்கையில் விழுந்த விண்கற்கள்! பூமிக்கு வெளியில் உயிர்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்!

Written by vinni   // January 26, 2014   //

20140125-191612இலங்கையில் 2012-ம் ஆண்டின் இறுதியிலும் 2013-ம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதன்படி, பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாக பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக பிபிசியிடம் பேசிய விஞ்ஞானி சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை கடந்தும் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கு நிரூபணம் என்று சந்திரா விக்ரமசிங்க கூறினார்.

அரலகங்வில என்ற கிராமத்தில் விவசாயிகள் கண்டெடுத்திருந்த கற்களை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தி இருந்தோம்.

ஆனால் ஆரம்பத்தில் அவை வழமையான விண்கற்களுக்குரிய அடிப்படை தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கருதப்பட்டதால் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி எங்களாலும் அவை விண்கற்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் இருந்தன என்றார் விக்ரமசிங்க.

அவை ஏற்கனவே கிடைத்திருக்கின்ற விண்கற்களைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தமையால் தான் இந்த சந்தேகம் வந்திருந்தது.

ஆனால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட உயர் ரக இரசாயன ஆய்வுகளின் முடிவில் இவை உண்மையில் விண்கற்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

இலங்கையில் கிடைத்த இந்த விண்கற்கள் முன்னெப்போதும் வழங்காத, இன்னொரு புதிய வரலாற்று திருப்புமுனையான தகவலையும் தந்திருப்பதாக பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த விண்கற்களில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி உறுதியாகியிருந்தது. வானிலிருந்து விழுந்த இந்த விண்கற்களில் இவ்வாறான உயிர்படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் உயிர் என்பது பூமியையும் தாண்டிய பேரண்ட பண்புகளைக் கொண்டது என்பது நிரூபணமாகியிருக்கிறது என்றார் அவர்.

உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுதான் இந்த விண்கற்கள் மூலம் கிடைத்துள்ள முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் அவர்களே, இந்தக் கற்கள் பூமியில் வந்து விழுந்த பின்னர் தான் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பூமியில் வந்து சேர்ந்த பின்னர் கூட அவற்றில் இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம் அல்லவா? என்று பிபிசி வினவியது.

இந்தக் கற்கள் பூமியில் நீண்டகாலத்திற்கு இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாகப்படலாம். ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால், இங்கு நாங்கள் ஆராய்ச்சி நடத்திய கற்கள் விழுந்து சில மணிநேரங்களில் கண்டெடுக்கப்பட்டவை.

அவை வானிலிருந்து விழுந்தவை தான் என்பதிலும் சந்தேகம் ஏதுமில்லை. அதில் நுண்ணுயிர் படிமங்கள் இருந்தன என்பதிலும் சந்தேகமில்லை என்றார் பிரிட்டனின் பாக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண் உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும் முன்னணி விஞ்ஞானியுமான பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க.

உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்டது என்கின்ற கோட்பாடுகளுக்கு மாறான வாதத்துக்கு இலங்கையில் கிடைத்த விண்கற்கள் ஆதாரமாக அமைவதாகவும் பேராசிரியர் விக்ரமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

இதனாலேயே, குறித்த விண்கற்கள் கிடைத்த அரலகங்வில பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீட்ரோய்ட் எனப்படும் விண்கற்கள், கொமெட் எனப்படும் வால் வெள்ளிகள் அல்லது எரிநட்சத்திரங்களின் சிதைவுகள். அதாவது வால்வெள்ளிகள் சூரியனுக்கு அருகில் வரும்போது அவை எரிந்து விழும் சிதைவுகளே விண்கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.