இந்தியா-நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி ’டை’யில் முடிவடைந்தது

Written by vinni   // January 25, 2014   //

indiavsnewzealand-ss-5-12-1இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கியது. முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இஷாந்த் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வருண் ஆரோன் சேர்க்கப்பட்டார்.

இதேபோல நியூசிலாந்து அணியில் மில்ஸ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பென்னட் இடம் பெற்றார். இரு அணி வீரர்கள் வருமாறு:– இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, வருண் ஆரோன். நியூசிலாந்து: மேக்குல்லம் (கேப்டன்), ரைடர், மார்ட்டின், குப்தில், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன், லுகே ரோஞ்சி, நாதன் மேக்குல்லம், பென்னட் சவுத்தி, மெக்லகன்.

இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று 3–வது முறையாக நியூசிலாந்தை முதலில் ஆட அழைத்தார். அந்த அணியின் தொடக்க வீரர் ரைடர் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 36 ரன்னாக (4.2 ஓவர்) இருந்தது. மற்றொரு தொடக்க வீரரான மார்ட்டின் குப்திலும், வில்லியம்சனும் 2–வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினார்கள்.

இருவரது சிறப்பான ஆட்டத்தில் ரன் மளமள என்று உயர்ந்தது. இதனால் 20.1 ஓவரில் நியூசிலாந்து 100 ரன்னை தொட்டது. மிகவும் சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடியை முகமது ஷமி பிரித்தார். வில்லியம்சன் 74 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 189 (32.5 ஓவர்) ஆக இருந்தது. 2–வது விக்கெட் ஜோடி 153 ரன் குவித்தது. 5-வது ஆட்டக்காரராக வரவேண்டிய அதிரடி பேட்ஸ்மேன் கோரி ஆண்டர்சன் முன்னதாக களம் இறங்கினார். அவரை வந்த வேகத்திலேயே அஸ்வின் வெளியேற்றினார். அவர் 8 ரன்களே எடுத்தார்.

மறுமுனையில் இருந்த குப்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். 123 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். 82–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 5–வது செஞ்சூரி ஆகும். குப்தில் 111 ரன் எடுத்திருந்தபோது (129 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 242 ஆக (37.2 ஓவர்) இருந்தது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் மேக்குல்லம் ரன் எதுவும் எடுக்காமலும், டெய்லர் 17 ரன்னிலும், நாதன் மேக்குல்லம் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஆனாலும் அந்த அணி தொடர்ந்து ரன்களை குவித்தது. விக்கெட் கீப்பர் லுகே ரோஞ்சி அதிரடியாக விளையாடி 20 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்தபோது நியூசிலாந்து 44 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்திருந்தது. கடைசி நேரத்தில் சவுத்தி அதிரடியாக விளையாடினார்.

அவர் 23 பந்தில் 3 சிக்சருடன் 27 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 314 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

315 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடுமையான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா,ஷிகார் தவான் களமிறங்கினர்.இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசினர்.ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.மெக்லனகன் ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார்.இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.

இந்நிலையில் அதிரடியான ஆட்டத்திற்கு ஆண்டர்சன் முடிவு கட்டினார்.ஷிகார் தவான் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவரை ஆண்டர்சன் வெளியேற்றினார்.அடுத்து களமிறங்கிய கோலி சற்று நிதானமாக ஆடினார்.அதிரடியாக ஆடிய சர்மா ஆண்டர்சன் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.அடுத்து ரஹானே களமிறங்கினார்.அடுத்த ஓவரிலேயே கோலி சொற்ப ரன்னில் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து ரஹானே பெவிலியன் அனுப்பப்பட்டார்.

இந்திய அணி 17.3 ஓவர்களில் 78 ரன்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய தோனி மற்றும் ரெய்னா சற்று நிதானமாக ஆடினர்.ரெய்னா பவுண்டரிகளாக விரட்ட மறுமுனையில் தோனி சிக்ஸர்களாக விளாசினார்.இந்தியா மீண்டும் எழுச்சி அடைந்த நிலையில் ரெய்னா 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் இறங்கினார்.தோனி ஆண்டர்சன் பந்தில் சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்த  நிலையில் அடுத்த பந்தில் சவுதீயிடம் பிடிபட்டார்.இந்திய அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது என்ற நிலையில் அஸ்வின் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.அடுத்து களமிறங்கிய ஜடேஜா அஸ்வினுடன் இணைந்து ஆடினார்.இருவரும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர்.அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.தொடர்ந்து சிறப்பாக ஆடிய அஸ்வின் 40வது ஓவரின் முடிவில் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார் இதில் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

45 வது ஓவரை நாதன் மெக்கல்லம் வீசினார்.முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்ட அஸ்வின் அதே ஓவரில் அவுட் ஆனார்.அஸ்வின் 46 பந்துகளில் 65 ரன்கள்(8 பவுண்டரி,1 சிக்ஸ்) அடித்தார்.ஜடேஜா தொடர்ந்து போராடினார் ஆனால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அவருடன் ஜோடி சேராமல் அவுட் ஆனார்கள்.ஜடேஜா கிடைத்த அனைத்து பந்துகளையும் அடித்து ஆடினார்.

கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை ஜடேஜா மாற்றினார்.கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.அந்த ஓவரை ஆண்டர்சன் வீசினார்.முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உள்பட 14 ரன்கள் கிடைத்தது.கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைபட்டது ஆனால் இறுதியாக 1 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

இதனால் பரபரப்பான ஆட்டம் இறுதியாக முடிவுக்கு வந்தது.50வது ஓவரின் முடிவில் இந்திய அணி 314 ரன்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை சமன் செய்தது.அதிரடியாக ஆடிய ஜடேஜா 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.எனவே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.அடுத்து 4வது ஒருநாள் போட்டி வருகிற 28ந்தேதி ஹாமில்டன்னில் நடைபெறுகிறது.


Similar posts

Comments are closed.