த.தே.கூட்டமைப்பை சந்திக்க அரசாங்கத்திற்கு ஏற்பட்ட திடீர் ஆசை

Written by vinni   // January 25, 2014   //

TNAஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கொண்டு வரவுள்ள சர்வதேச விசாரணை தொடர்பான யோசனையைத் தடுக்க அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற முயற்சித்து வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இந்த யோசனை தடுக்க தென் ஆப்பிரிக்காவின் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு குழுவை உடனடியாக நியமித்து கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் பேச்சுக்களை நடத்தி அரசாங்கம், கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமற்ற அழைப்பை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தென் ஆபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இந்த விஜயத்தில் இணைத்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுவை நியமித்து மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதிலும் தாம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதேவேளை மேற்படி விடயம் தொடர்பில் அரசாங்கம் தமக்கு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையோ அழைப்பையோ விடுவிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை வந்திருந்த ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி இது பற்றி தமக்கு அறிய தந்ததாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு முன்னர் தாம் தமிழ் மக்களுக்கு அனுகூலமானவற்றை செய்து வருவதாக காட்டுவதற்கு பொய்யான முனைப்புகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இவ்வாறே இம்முறை அரசாங்கம் செய்ய முயற்சித்து வருகிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டால் அப்படியான செயற்பாட்டுக்கு கூட்டமைப்பின் ஆதரவோ பங்களிப்போ கிடைக்காது.

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை நடத்தி தமிழ் மக்களுக்கு நிரந்த அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் நேர்மையான அர்ப்பணிப்புடன் இருப்பதை வெளிக்காட்டினால் கூட்டமைப்பு பங்களிப்பை வழங்க தயங்காது.

அரசாங்கத்தின் அதிகாரபூர்வமற்ற இந்த அழைப்பு குறித்து தென் ஆபிரிக்கா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளோம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.