அத்துமீறும் போர் விமானங்கள்: சீனா கடும் எச்சரிக்கை

Written by vinni   // January 25, 2014   //

china_islands_001தென் சீனக் கடலில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளின் உரிமைப் பிரச்சினை உட்பட ஜப்பான் தனது அண்டை நாடுகளான சீனா, தென் கொரியா ஆகியவற்றுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுவருகின்றது.

கடற்பரப்பு எல்லைகளிலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிமை மீறல் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கிழக்கு சீனக் கடலில் தனது பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய சீனா அந்த பகுதியின் மேலே பிற நாட்டு ராணுவ விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தது. அவ்வழியே பறக்க நேரிட்டால் அவர்கள் முன்கூட்டியே தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் சீன அரசு குறிப்பிட்டது.

அமெரிக்கா, ஜப்பான் உட்பட சில நாடுகள் இதனை ஆத்திரமூட்டும் ஒரு நடவடிக்கையாக விமர்சித்தன. அதேபோல் அவ்வழியே தங்கள் நாட்டு ராணுவ விமானங்கள் பறப்பதற்கு முன்கூட்டியே அறிவிப்பது, தங்களை அடையாளம் காட்டிக்கொள்வது மற்றும் அனுமதி பெறுவது போன்ற சீனாவின் விதிமுறைகளைத் தாங்கள் புறக்கணிப்பதாகவும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையில் சமீபத்தில் சீனாவின் பல ரக விமானங்கள் தங்களின் பாதுகாப்புப் பகுதியில் நீண்ட தூர ரோந்து ஒன்றினை மேற்கொண்டதாக அந்நாட்டு விமான படைப்பிரிவின் தகவல் தொடர்பாளரான ஷென் ஜின்கே தெரிவித்துள்ளார்.

அப்போது ஏராளமான பிற நாட்டு ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்ததாகவும் சீன விமானங்கள் அவற்றுக்கு இணையாகச் சென்று அவற்றை எச்சரித்ததாகவும் ஷென் குறிப்பிட்டார். ஆனால் ரோந்து சென்ற தேதி போன்ற தகவல்களையோ, எச்சரிக்கை அளிக்கப்பட்ட விமானங்களின் அடையாளங்களையோ அவர் வெளியிடவில்லை.


Similar posts

Comments are closed.