மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மரணதண்டனை! பாகிஸ்தானில் கொடூரம்

Written by vinni   // January 25, 2014   //

pakistan_mosque_001பாகிஸ்தானில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வாழ் இங்கிலாந்து நாட்டவரான முகமது அஸ்கர், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கடிதம் எழுதியதாக கடந்த 2010ம் ஆண்டு ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, அஸ்கர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், உண்மையில் இவ்வழக்கு சொத்து பிரச்சினை தொடர்பானது என்றும் அவரது வழக்கறிஞர் வாதாடினார்.

இங்கிலாந்து மருத்துவமனை மருத்துவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அஸ்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மனநிலை பாதிக்கப்பட்ட அஸ்கர், இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் சிகிச்சை பெற்றுவிட்டு 2010ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். பின்னர் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவருடன் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் மதத்தை இழிவுபடுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது என்று அஸ்கரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. அஸ்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அஸ்கருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும், சிறையில் அஸ்கரின் பாதுகாப்பு மற்றும் மனநிலை குறித்து கவலைப்படுவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் கடுமையாக மதச்சட்டங்கள் அமலில் இருப்பதால், ஏராளமானோர் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் மத நிந்தனை குற்றங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது மிகவும் குறைவு. இந்த சட்டங்கள், சிறுபான்மை மக்களை குறிவைத்து சுயலாபத்துக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.


Similar posts

Comments are closed.