மன்னார் மனித புதைகுழி: சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்

Written by vinni   // January 25, 2014   //

177255614mannar-puthaikuli1மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.

முதற்கட்டமாக குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 13ஆவது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை (24) குறித்த மனித புதைகுழி தோண்டும் பணிகள் இடம்பெற்றது.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (24) குறித்த புதைகுழி தோண்டப்பட்ட போதும் எதுவித மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை.

எனினும் அடையாளப்படுத்தப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இது வரை 10 பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெட்டிகளில் அடைக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் வைத்தியசாலையில் ஒரு இடத்தில் பெட்டிகளில் அடைக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை வைப்பதற்கான இடத்தை அடையாளப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 44 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாளை சனிக்கிழமை (25) மன்னார் நீதவான் முன்னிலையில் புதைகுழி தோண்டும் பணிகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.