ஜெனிவா அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக சிரியா அச்சுறுத்தல்

Written by vinni   // January 24, 2014   //

syriaகடந்த மூன்றாண்டுகளாக சிரியாவையே துண்டாடிக் கொண்டிருக்கும் உள்நாட்டுக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்கா உட்பட உலக சக்தி நாடுகளால் ஜெனிவாவில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதன்முதலாக சிரியாவில் போரிட்டுவரும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தை துவங்கியது. ஆனால் தொடக்கத்திலிருந்தே இரு தரப்பினரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பது பிரச்சினைக்குரியதாகவே இருக்கின்றது.

போர் நிறுத்தத்தின் முதல்கட்டமாக சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகவேண்டும் என்று எதிர்த்தரப்பு குறிப்பிட அரசு தரப்பு பிரதிநிதிகளோ அதற்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றனர்.

மேலும் தீவிரவாதத்தை எதிர்த்து நடைபெறும் போர் என்று யுத்தத்திற்கான முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் இரு தரப்பினருக்குமிடையே நேரடியான பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தரப்பினருமே ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டனர். இதனால் தற்போது ஐ.நாவின் சமாதானத் தூதுவரான லக்டர் பிரஹிமி இரு தரப்பினரிடையேயும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுகின்றார்.

இந்த நிலையில் நாளை அமைதிப் பேச்சுவார்த்தையின் தீவிர விவாதங்கள் தொடங்கவில்லை என்றால் இந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறுவதாக சிரியா அச்சுறுத்தியுள்ளது.

பிரஹிமியுடன் சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வலித் அல் மொ-ஆலம் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் அவர் அரசு ஊடகங்கள் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று மாலை சிரியா அரசின் எதிர்த்தரப்பினரை பிரஹிமி சந்தித்துப் பேச உள்ளார். மூன்று நாட்களாகியும் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத இந்தப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையை அரசியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரண்டு பக்கங்களிலுமே பல பிரச்சினைகளை எதிர்த்து நின்றபோதிலும் உள்ளூர் யுத்த நிறுத்தங்கள், கைதிகள் பரிமாற்றம் மற்றும் வெகுவாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் போன்ற உறுதியான நடவடிக்கைகள் குறித்துப் பேச அவர்கள் விருப்பம் காட்டியுள்ளது நம்பிக்கை தருவதாக இருக்குமென்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


Similar posts

Comments are closed.