மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரமா? வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர் -கழுகுக்கண்-

Written by vinni   // January 23, 2014   //

SAM_9077-450x337முள்ளியவளை கிழக்கு, முள்ளியவளை மேற்கு பகுதிகளில் இறுதி யுத்தத்துக்குப்பின்னர் 550 க்கும் அதிகமான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன.

இந்தக்குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கென்று யுத்தத்துக்கு முன்னர் அங்கு கட்டப்பட்டிருந்த நான்கு பொதுக்கிணறுகளின் நீரும் தற்போது பளுப்பு மற்றும் மஞ்சள் நிறமாகியுள்ளன. மாற்று வழியின்றி குடிநீரைப்பெறுவதற்காக மக்கள் தத்தம் வீட்டு வளவுகளிலும், பொது இடங்களிலும் ஆங்காங்கே புதிது புதிதாக தோண்டும் (அகழும்) கிணறுகளிலும் பளுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான நீரே ஊற்றெடுக்கின்றது. (பொதுவில் நிறம், மணம், சுவை அற்றது நீர் என்பார்கள். இங்கோ நிறம், மணம், சுவை எல்லாம் கிடைக்கின்றது.)

இந்த தகவல் எப்படியோ கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு போய்ச்சேர்ந்த பின்னர் அவர்கள் குறித்த பகுதிகளில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் குடிநீரில் ஒருவகை இரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த குடிநீரை பாவித்தால் கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அங்கவீனம், புத்திசுயாதீனம், மந்தநிலை, வளங்காநிலை போன்ற பிறவிக்குறைபாடுகளுடன் பிரசவங்கள் சம்பவிப்பதற்கும் முழுக்க முழுக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புதிது புதிதாக தோண்டும் (அகழும்) கிணறுகளிலும் பளுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான நீரே ஊற்றெடுப்பதாலும், அந்த மக்களின் வருமானத்துக்கு ஏற்ப வேறு மாற்று வழிகள், உத்திகள் இல்லாததாலும், அறியாமை காரணமாகவும் மக்கள் பளுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான நீரையே குடிப்பதற்கு பாவித்து வருகின்றனர். குறித்த நீரை கொதிக்க வைத்து பருகினாலும், அதில் கலந்துள்ள இரசாயனத்தன்மையை பிரிக்க முடியாதென்றும், இரசாயன தாக்கத்தின் வீரியத்தை குறைக்க முடியாதென்றும் கூறப்படுகின்றது.

மிகவும் குறுகிய இரண்டரை கிலோமீற்றர் நிலப்பிரதேசத்தை “யுத்த பாதுகாப்பு வலயம்” என்று அறிவித்து ஐந்து மாவட்டங்களைச்சேர்ந்த சுமார் ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒருங்கச்செய்து, செறிவாக மக்கள் தஞ்சமடைந்திருந்த அந்த பகுதிக்குள் இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, (தடைசெய்யப்பட்ட) இரசாயன(பொஸ்பரஸ்) குண்டுகளையும், எரி அமிலம் மற்றும் நச்சுஃவிஷ வாயு குண்டுகளையும் சிறீலங்கா அரசு வீசியதை ஐ.நா அறிக்கைகள், போர்க்குற்ற காணொளிகள் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் இதுவும் அதற்கு வலுச்சேர்க்கும் மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரமா?

வாரி வாரி அள்ளித்தந்த நீர் வளத்தில் கையை வைத்து (இரணைமடு குளநீரை காவேரி ஆற்று நீர்ப்பிரச்சினை போலாக்கி) யாழ்ப்பாணத்தை கர்நாடகாவாகவும், கிளிநொச்சியை தமிழகமாகவும், இல்லையேல் கிளிநொச்சியை கர்நாடகாவாகவும், யாழ்ப்பாணத்தை தமிழகமாகவும் காட்டிக்கொண்டிருக்கும் புல்லுருவிகள், விசமிகள், ஆழ ஊடுருவிகள், புல்லர்கள், உலுத்தர்கள், முள்ளமாரிகள், முடிச்சவிழ்க்கிகள், நீசர்கள், நீரை கொண்டு போய்ச்சேர்த்தே தீருவேன் என்று அடம்பிடிப்பதை விடுத்து விட்டு இன்னுமொரு சோமாலியாவாக, கென்யாவாக, சூடானாக, எதியோப்பியாவாக, முள்ளிவாய்க்கால் மண்ணும், மக்களும் மாறாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த பகுதி நீரையும் நிலத்தையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதில் மறைந்து கிடக்கிற உண்மைத்தன்மையை உலகறியச்செய்ய இதயசுத்தியுடன் உழைப்பார்களா?

இப்படி நித்தமும் பல ஆயிரம் கேள்விகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளுடன் நீளுகிறது தமிழர்களினதும், தமிழ் நிலத்தினதும் வாழ்க்கை கோலங்களும்… நாள்களும்…

முக்கிய குறிப்பு: இன்று முல்லைத்தீவில் மிகப்பிரமாண்டமாக ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அது இறுதி யுத்தத்தை தலைமையேற்று வழிநடத்திய சவேந்திரசில்வா, முல்லைத்தீவு மாவட்டத்தின் கூட்டுப்படைகளின் தலைமை கட்டளைத்தளபதி பதவியை ஏற்கும் வைபவ நிகழ்ச்சியாக, அல்லது அவர் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது சிவில் அல்லது இராணுவ விவகாரம் சார்ந்த சந்திப்பாகவும் இருக்கலாம்.

(நீர் பகுப்பாய்வு மற்றும் கிணற்று நீர் ஒளிப்படங்கள் நாளை வெளிவரும்.)
-கழுகுக்கண்-


Similar posts

Comments are closed.