ஒரே மேடையில் மோதிக் கொண்ட விக்கினேஸ்வரனும் மகிந்தவும்

Written by vinni   // January 19, 2014   //

downloadதெல்லிப்பளையில் நடைபெற்ற புற்றுநோய்சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் இருவரும் ஒரே மேடையில் பரஸ்பரம் கருத்து மேதலில் ஈடுபட்டுக்கொண்டனர்.

முதலமைச்சர் தனது உரையில் வடக்கில் தொடரும் இராணுவப்பிரசசனம் உள்ளிட்ட விடயங்களை விலாவாரியாக முன்வைத்திருந்தார். இராணுவப் பிரசன்னத்தால் வடக்கில் மக்களின் வாழ்வு சவாலாகியிருப்பதாகவும் சிவில் நiடைமுறைக்கு வடக்கை கொண்டுவர வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கு முதலமைச்சருக்கு தெரிந்திருக்குமோ தெரியவில்லை. கடந்தகாலத்தில் மிக குறுகிய தூர இடைவெளியில் பல படைமுகாம்கள் காணப்பட்டன. அப்போது 75ஆயிரம் படை யினர் வடமாகாணத்தில் இருந்தார்கள்.

இன்று அந்த முகாம்கள் மிக குறைக்கப்பட்டுள்ளது. படையினரின் எண்ணிக் கயும் 12ஆயிரமாக குறைக்கப் பட்டுள்ளது. படையினர் முழு நாட்டிலும் இருக்கவேண்டுமென உறுதியாகத் தெரிவித்தார்.

படையினர் பிரசன்னத்தினால் அதிக அநீதிகள் நடப்பதாக ஊடகங்களும் கூறிக்கொண்டிருக்கின்றன. எந்த இனத்திற்கும் மற்றய இனத்தை அடக்கி ஒடுக்கும் உரித்து கிடையாது. அவ்வாறான ஒரு நிலைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதுமில்லை. நாம் எல்லோரும் மனிதர்களாக சகல மனிதர்களுக்கும் உள்ள அம்சங்களுடன் பிறந்தோம்’ எனவும் மஹிந்த தனதுரையில் தெரிவித்தார்.

அத்துடன் ‘நீதியரசராக சீ.வி.விக்னேஷ்வரன் எங்கள் கௌரவத்தை பெற்றிருந்தவர். அவர் தற்போது அரசியல்வாதியாக எல்லா மேடைகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை பார்த்து நான் சந்தோஷப்படுவதா? கவலைப்படுவதா? என்பது எனக்கு தெரியாது.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். முதலமைச்சர் கூறிய கருத்துக்கு நீண்ட கருத்துக் கூற நான் விரும்பவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்..

முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனின் முழுமையான உரை இணைப்பு :-

என் மனைவியாரையும் என் சகோதரியாரையும் புற்றுநோய்க்கு நான் பலிகொடுத்தவன் என்ற முறையில் எமது தமிழ் மண்ணில் புற்றுநோய்க்கான மருத்துவ மனையொன்றினை நவீன காலத்திற்கு ஏற்ற முறையில் அவர்கள் சேர்ந்து அமைத்துத் தந்திருப்பதை ஒரு பெரும் பேறாகவே கணிக்கின்றேன்.

மகரகமை சென்று வரவேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்த்து வடமாகாணத்தின் உள்ளேயே புற்று நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களைச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து உரிய சிகிச்சை பெற வழி அமைத்துள்ளார்கள் ‘துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பு’ நிறுவனத்தினர். நோயாளர்களின் உற்றார் உறவினர்கள் மகரகமை சென்று பரிதவிக்கும் நிலையையும் நீக்கியுள்ளார்கள்.

‘வாழ்க்கைக்காக – வாழ்வோரின் பயணம்’ என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்தப் பாதை நிறுவனம் இரு இளைஞர்களின் கனவின் பூர்த்தி என்றால் அது மிகையாகாது.

நாதனும் சரிந்தவும் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரைக்கும் கால்நடையாய்ப் பயணம் செய்து, மக்களின் உதவிபெற்று சேர்த்த பணத்திலேயே இந்த மருத்துவமனையை அமைத்துள்ளார்கள்.

அப்பணத்திற்கு மேலதிகமாக நானூற்றி ஐம்பது இலட்சம் பணத்தை என் கல்லூரி நண்பர் இரட்ணா சீவரத்தினம் அவர்களின் மகனான அவுஸ்திரேலியாவில் தற்பொழுது வசிக்கும் வைத்திய கலாநிதி தினேஷ் சீவரத்தினம் கொடுத்துதவியுள்ளார் என்பது என் மனதைக் குளிர வைக்கின்றது.

இலங்கையின் வடக்கிற்குந் தெற்கிற்கும் இடையில் இதுவரை இருந்துவந்த மிகப்பரிதாபகரமான ஆத்திரமும் ஆக்ரோஷமும் அண்மைக் காலங்களில் ஒரு சிறிதளவாவது தணிந்து வருவதை நான் காண்கின்றேன்.

அந்தப் பரிதாபகரமான நிலை அரசியல் காரணங்களினால் ஏற்பட்டதென்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சுயநல அரசியல் எம்மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டிருக்கின்றது. ஆனால் அரசியலுக்கு அப்பால் சென்று அந்தரிப்பவர்களை ஆதரிக்குமுகமாக, துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக, நாட்டின் மனித ஒருமைத்துவத்தின் பிரதிபலிப்பாக, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களின் சின்னமாக, இந்த முயற்சி கைகூடப்பட்டுள்ளது.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற தமிழ் அன்னையின் வார்த்தைக்கு இலக்கணமாக நாதனும் சரிந்தவும் நடந்துள்ளார்கள். அவர்களின் முயற்சி எமக்கும் எமது சிந்தனைகளுக்கும் வலுவூட்டுகின்றன. புதிதாக மக்கள் ஆதரவைப் பெற்று வந்துள்ள எமது வடமாகாணசபை அங்கத்தவர்கள் முயன்று முன்னேற அவர்களின் முயற்சி முன்மாதிரியாக அமைந்துள்ளது.

போரானது தமிழ்க் குடும்பங்களில் மட்டுமன்றி சிங்களக் குடும்பங்கள் பலவற்றிலும் ஆற்றொணாத் துயரத்தையும் துன்பத்தையும் கொண்டுவந்திருந்தது என்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான்.

கொழும்பில் மேல்நீதிமன்றில் எம்முடன் வேலை செய்த ஒரு சிங்களப் பெண்மணி வேறு சில அலுவலர்களுடன் வந்து எம்முடன் மனநிறைவுடன் பேசிவிட்டு வெளிச்சென்றதும் அவருக்கு ஒரு இழவுச் செய்தி காத்திருந்தது.

இராணுவத்தைச் சேர்ந்த அவரின் கணவர் மன்னாரில் போரில் மாண்டுவிட்டார் என்பதே அந்தச் செய்தி. உடலைக் கொழும்புக்குக் கொண்டுவரமுடியாத நிலை. நாங்கள் யாவரும் முயன்று அதனைக் கொண்டு வர உதவினோம். அன்று சிரித்துப் பேசிய அந்தப் பெண்மணி தமது குழந்தைகளுடன் சேர்ந்து அழுது கதறிய நிலை இன்னமும் என் கண்முன் நிற்கின்றது.

அதுமட்டுமல்ல தமிழ்ப் பேசும் விதவைகள் பலரின் அழுகையையும் கவலையையும் கம்பலையும் மனம் விறைக்கக் கேட்டவன் நான். போர் அவலங்கள் மக்களுக்கு அப்பால், இனத்திற்கு அப்பால், அடையாளங்களுக்கு அப்பால் ஏற்பட்ட கொடூரமான பாதிப்புக்கள். புற்றுநோயும் அப்படித்தான்! எவரையும் எந்நேரத்திலும் தாக்கக் கூடிய கொடிய நோய் அது. பாகுபாடின்றிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

இன்றைய தினம் இந்தப் புற்று நோய் மருத்துவனையைத் திறந்து வைக்க மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை அழைத்திருப்பது சாலப் பொருத்தமே. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று முக்கிய அடிப்படைகளை முன்வைத்துத்தான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருந்தது. அவையாவன-

 1. வன்முறையை விலக்கி முன்னேறல்

2. நாட்டைப் பிரிக்காது முன்னேறல்

3. சமஷ்டி முறைமையை அனுசரித்து முன்னேறல்
என்பனவே அவை.

எமது தேர்தல் கொள்கைகளைப் பெருவாரியான வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் இருந்து அவர்களின் மனோநிலையை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.

ஆகவே வன்முறையைக் களைந்து, நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக ஒரே நாட்டினுள் வாழ்க்கை நடத்த முன்வந்துள்ள எங்கள் மக்களின் மனோநிலைக்கு இங்கு வருகை தந்திருக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் நம்பலாம்.

எமது தேவைகளைப் புரிந்து இனக் கூட்டுறவுக்கு வித்திடுவார் என்று நம்பலாம். புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்று எதிர்பார்க்கலாம். எம்மத்திக்கு அவரைக் கொண்டுவந்த ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

புற்று நோய் என்பது பலதரப்பட்டது. எனினும் அந்த நோய்க்கு உட்பட்டவர்களில் பெரும்பான்மையோர் உதவியற்ற ஒரு பரிதாபகரமான நிலையை அடைகின்றார்கள்.

தம்மைத்தாமே, பார்த்துக்கொள்ள பராமரித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையை அவர்கள் அடைகின்றார்கள். இதனால் அவர்களின் மதிப்பும் சுய கௌரவமும் பாதிப்பு அடைகின்றன. மனிதர் என்ற முறையில் எமக்கான மதிப்பும் மனித கௌரவமும் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டால் ‘நாம் மனிதர்கள்’ என்ற எமது அந்த அந்தஸ்து பலவீனம் அடைகின்றது.

மனிதத்தின் அஸ்திவாரமே ஆட்டங்காணத் தொடங்குகின்றது. எனவேதான் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில் அந்த நோயாளர்களின் சுற்றாடல் அவர்களுக்கு மனவேதனையைக் குறைக்கும் வண்ணமாக அமைய வேண்டிய ஒரு அவசியம் அங்கு ஏற்படுகிறது. இரக்கமும் அன்பும் அங்கு நிலவுவது அவசியம்.

புற்று நோய்க்கான உக்கிரத்தைத் தணித்து சமனப்படுத்த அந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைச் சௌகரியங்கள் மேம்படுத்தப் படவேண்டும். அப்பேர்ப்பட்ட தரமாற்றத்தை ஏற்படுத்த அஸ்திவாரமாக அமைவது புத்தபெருமானால் போதிக்கப்பட்ட மெத்தாவும் கருணாவும் என்றால் அதையாரும் மறுக்க முடியாது.

இரக்கமும் அன்பும் அத்துணை அவசியமாகின்றன இந்த நோயாளர்களின் வாழ்க்கையில். அவர்களின் மனித கௌரவத்தை நிலைநாட்ட அவை தேவைப்படுகின்றன.

 இந்த நோய்க்கு எவ்வாறு இரக்கமும் அன்பும் தேவைப்படுகின்றனவோ அதே போலத்தான் மனித வாழ்க்கையிலும் அவை அத்தியாவசியமாகின்றன. மனித சுய கௌரவம் பற்றி நாம் பேசும் போது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் காணும் வாசகங்கள் நினைவிற்கு வருகின்றன.

அதாவது உலகத்தில் சுதந்திரத்தையும், நீதியையும், சமாதானத்தையும் நிலை நாட்ட வேண்டுமென்றால் மனித குடும்பத்தின் அங்கத்தவர்கள் யாவருக்கும் அடிப்படையான மனித சுய கௌரவத்தையும் பிரித்தெடுக்கப்பட முடியாத சம உரிமைகளையும் வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

அதை மனதில் கொண்டே, நீங்கள் இங்கு வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கொன்றைக் கூற விரும்புகின்றேன்.

வடமாகாண மக்களின் சுய கௌரவம் சம்பந்தப் பட்ட விடயம் அது. அவர்கள் குறையை உங்களால் தீர்த்து வைக்க முடியும் என்ற எண்ணத்தில் நாட்டின் முக்கிய ஆணைபிறப்பிக்குஞ் சேனைத்தலைவர் ஆகிய உங்களுக்கு அதைக் கூறி வைக்கின்றேன்.

அதாவது எமது வடமாகாண மக்களின் உள்ளார்ந்த சுய கௌரவத்தைப் பாதிப்பதாகவே இங்கு காணப்படும் பெருவாரியான இராணுவப் பிரசன்னம் நோக்கப்படுகின்றது. எமது பொருளாதார விருத்திக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதையும் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் விட இந்த உள்ளார்ந்த சுய கௌரவப் பாதிப்பு மிகவும் முக்கியமானதென்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏன் என்றால் இங்கு குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரில் அதிகப் பட்சமான பெரும்பான்மையினர் உள்ள10ர் வாசிகளின்; மொழியைப் பேசுவதில்லை, மதங்களைத் தழுவியவர்கள் அல்ல, அவர்களின் கலாசாரத்தில் ஊறியவர்கள் அல்ல, அவர்களின் ஊர்களைச் சேர்ந்தவர்களும் அல்ல.

இங்கிருக்கும் இராணுவத்தினர் தொகைக்கு ஈடான தொகையினரான எமது தமிழ்ப்பேசும் மக்கள் அவர்கள் சார்பில் என்னைப் பேசுமாறு கட்டளையிட்டே என்னை என் பதவியை வகிக்க அனுப்பியுள்ளார்கள். அவர்களின் கட்டளையைச் சிரமேல் கொண்டே இதனை மேன்மை தங்கிய உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எமக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வடக்கு வாழ் மக்களின் நல உரித்துக்கள், அவர்களின் பாதுகாப்பு, அவர்களின் சுயகௌரவம் ஆகியவையுங் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

எங்கள் இந்த எதிர்பார்ப்புக்களுக்கு முரண்பட்டதாகத் தேசியப் பாதுகாப்பு அமைய வேண்டுமென்பதல்ல. இரண்டுமே பேணப்படலாம் என்பதே எமது கருத்து. ஆகவே எமது மக்கள் சார்பாக உங்களிடம் நான் கூறிவைப்பது யாதெனில் போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தலிலும் எம் மக்கள் வாழ்க்கையில் இராணுவ உள்ளீட்டைக் குறைப்பதிலுங் கரிசனை காட்டி இராணுவக் குறைப்புக்கான ஒரு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அதனைத் தடங்களின்றி நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அரசியலுக்கு அப்பாற் சென்று மனிதாபிமான முறையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு விதவை தனது காணியை இராணுவம் கையகப் படுத்தி வைத்திருப்பதைக் காண்கின்றார். அதே காணியைப் போர்வீரர்களோ அவர்களின் குடும்பத்தவரோ அல்லது அவர்களின் உற்றார் உறவினர்களோ வந்திருந்து பதப்படுத்தி அதில் வேளாண்மை செய்வதைப் பார்க்கின்றார்.

அதில் வரும் வருமானங்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று இராணுவத்தினர் சந்தைப் படுத்துவதைக் காண்கின்றார். அதே நேரந் தனக்கு இருக்க இடமில்லை, செய்தொழில் இல்லை, பாதுகாப்பு இல்லை என்பதை அவதானிக்கின்றார். அவரின் சுயகௌரவத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

‘ஏன் பிறந்தேன் நான்?’ என்று அவர் அங்கலாய்ப்பது ஏன் எமக்கு புரியவில்லை? அவரின் சுயகௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஏன் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றோம்? போர் எமது மக்களைக் களைப்படையச் செய்துள்ளது. பாதிப்புக்களுக்கு உள்ளடக்கியுள்ளது.

போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னரும் இந்த நிலை தொடரவேண்டுமா? எமது உடல்களைப் போன்றதே எமது நாடும். உடலின் ஒரு பகுதி உக்கிரமாகப் பாதிப்படைந்தால் உடலும் அதேவாறு பாதிப்படைகின்றது. வலிநிவாரணிகள் போன்றவை ஒரு சில காலத்திற்குப் பாதிப்பின் உக்கிரத்தைக் குறைத்து வைத்திருக்கக் கூடும். ஆனால் காலாகாலத்தில் முழு உடலும் பாதிப்பின் உக்கிரத்தை அனுபவிக்க நேரிடும்.

எமது மக்கள் உறுதியான மனமுடையவர்கள். அதே நேரத்தில் ஊக்கமுடன் வேலைசெய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்கள் முன்னேற வழிவகுப்பது எம் எல்லோரதுங் கடமையாகும். அவர்களின் சுய கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், அவர்களின் சுற்றாடலைத் தூய்மைப்படுத்தி, அவர்கள் சுதந்திர மக்களாக, இந்த நாட்டின் குடிமக்களாக முன்னேற்றப் பாதையில்ப் பயணிக்க நாங்கள் யாவரும் ஒன்றுபடுவோமாக!

அவர்கள் சுபிட்சப் பாதையில் செல்வது எமது நாடு முழுவதற்கும் நன்மை பயக்கும் என்பதை நாம் மனதில் வைத்து, அவர்களின் இடர்கள் களைய மேன்மைதகு கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஆவன செய்ய முன்வர வேண்டும் என்று வினயமாகக் கேட்டு என்னைப் பேச அழைத்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.


Similar posts

Comments are closed.