இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து 292 ரன் குவிப்பு

Written by vinni   // January 19, 2014   //

newzealand_westindies_3test_003இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார். இரு அணி வீரர்கள் விவரம்:–

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா, முகமது ஷமி.

நியூசிலாந்து: மேக்குல்லம் (கேப்டன்), குப்தில், ரைடர், வில்லியம்சன், ரோஸ் டெய்லர், ஆண்டர்சன் கோரி, லுகே ரோஞ்சி, நாதன் மேக்குல்லம், சவுத்தி, மிலின், மெக்லகன்.

முகமது ஷமி தனது அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து தொடக்க ஜோடியை எளிதில் சரித்தார். ரைடர் (18), குப்தில் (8) ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். 7.4 ஓவரில் 32 ரன் எடுப்பதற்குள் நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.

3–வது விக்கெட்டான வில்லியம்சன்– முன்னாள் கேப்டன் டெய்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளி ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.

ரவிந்திர ஜடேஜா இந்த ஜோடியை பிரித்தார். வில்லியம்சன் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். 88 பந்தில் 7 பவுண்டரியுடன் அவர் 71 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்தபோது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 153 ஆக இருந்தது. 3–வது விக்கெட் ஜோடி 121 ரன் எடுத்தது.

வில்லியம்சன் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் டெய்லர் ஆட்டம் இழந்தார். அவர் 55 ரன்னில் முகமதுஷமி பந்தில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 171 ரன் ஆக இருந்தது.

5–வது விக்கெட்டான கேப்டன் மேக்குல்லம்– கோரி ஆண்டர்சன் ஜோடியும் சிறப்பாக விளையாடியது. இதனால் 40–வது ஓவரில் அந்த அணி 200 ரன்னை தொட்டது.

ஸ்கோர் 213 ஆக இருந்த போது மேக்குல்லம் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை புவனேஸ்வர்குமார் கைப்பற்றினார். அவர் 25 பந்தில் 4 பவுண்டரியுடன் 30 ரன் எடுத்தார்.

மறுமுனையில் இருந்த கோரி ஆண்டர்சன் அதிரடியாக விளையாடினார். இதேபோல விக்கெட் கீப்பர் லுகே ரோஞ்சியும் அதிரடியாக ஆடினார். ஜடேஜா வீசிய 45–வது ஓவரில் அவர் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 20 ரன் எடுக்கப்பட்டது. அவர் 30 ரன்னில் (18 பந்து) அவுட் ஆனார்.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 292 ரன் குவித்தது. ஆண்டர்சன் 40 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். முகமது ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.


Similar posts

Comments are closed.