மரபுசார்ந்த பார்வைக் குறைபாடை மரபணு சிகிச்சை மூலம் மாற்றலாம்

Written by vinni   // January 18, 2014   //

ht1573மரபுசார்ந்த அரிய வகை பார்வைக் குறைபாடை மரபணு சிகிச்சை மூலம் மாற்றமுடியும் என்ற வியத்தகு உண்மையை மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆறு தன்னார்வலர்களை ஆய்வு செய்து பார்த்ததன் மூலம் இந்த தகவல் கண்டறிந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழித்திரையில் உள்ள பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மரபணுவை மாற்றுவதன் மூலம் இந்த நோய்க் குறைபாட்டை நீக்கமுடியும் என்று மருத்துவர்கள் தங்களின் பரிசோதனைகளில் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிகிச்சை முறையை மேற்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மங்கலான வெளிச்சத்தில் பார்வை மேம்பாடுகள் இருப்பதாக சில நோயாளிகள் தெரிவித்தனர்.

ஆறு பேரில் இருவர் கண் மருத்துவரால் தொங்க விடப்பட்டுள்ள எழுத்து வரிகளையும் படிக்க முடிந்துள்ளது என்ற தகவலை லான்செட் மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது.

இவர்களில் ஒருவரால் இரவு வானத்தில் இருந்த நட்சத்திரங்களையும் பார்க்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மரபணு சிகிச்சை காலவரையின்றி நீடிக்குமா என்பதை இப்போதே உறுதி செய்யமுடியாது என்றும் இந்தப் பணியில் ஈடுபட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நுப்பீல்டு கண் ஆய்வுக்கூடத்தின் ராபர்ட் மக்லெரன் எச்சரிக்கின்றார்.

நோயாளிகள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும்வரை பார்வை மேம்பாடுகள் பராமரிக்கப்படக் கூடும் என்றும் அதற்கு ஒரு நோயாளிக்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 50,000 பேரில் ஒருவருக்குத் தோன்றும் இந்தக் குறைபாடு ஆண்களைத் தாக்குகின்றது.

அதிலும் குறிப்பாக இளவயதினரே இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். மெதுவாகத் தீவிரமடையும் என்பதால் அவர்களின் மீது மருத்துவரின் அதிக கண்காணிப்பும் தேவைப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.