கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Written by vinni   // January 16, 2014   //

gotabhaya-rajapakse-seithy-150போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா திரட்டிய சாட்சியங்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் திரட்டிய தகவல்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஏ ஸ்பவன் தெரிவித்துள்ளார்.

“நாடு முழுவதிலும் உள்ள பலதரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்டளவில் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர்.

நாம் அந்தச் சந்திப்புகளை வகைப்படுத்துவதில்லை. தூதுவர் ஸ்டீபன் ராப்பின் அறிக்கை அவரது சார்பிலானது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த சாட்சியங்களை நேரில் சந்தித்து விபரங்களை பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சுதந்திரமான – நம்பகமான விசாரணைகளின் மூலம் சிறிலங்கா உண்மையை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு தகவல் தெரிவித்தவர்களின் அடிப்படையில், அமெரிக்கா சாட்சிகளிடம் தகவல் திரட்டியதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவ்வாறு தம்மால் வகைப்படுத்திக் கூறமுடியாது என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.