த. தே. கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சி – சீ.வி.கே.சிவஞானம்

Written by vinni   // January 15, 2014   //

kanthaiya-sivagnanam1வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர். அவருக்கு எதிராக மாகாணசபைக்குள் சதி திட்டங்கள் உருவாக்கப்படுவதாக வெளியாகும் விசமத்தனமான கட்டுரைகளை த. தே. கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கிறோம் என பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கே எவரும் துணியாத நிலையில், அவருக்கு எதிராக சதி திட்டம் உருவாக்கப்படுவதாக கூறுவது மிக அதிர்ச்சியளிக்கின்றது. ஆனால் இவ்வாறான விசமத்தனமான கட்டுரைகள் தொடர்பாக நாம் மிகதெளிவாக இருக்கிறோம் என மாகாணசபை பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபை உறுப்பினர்களால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சதி திட்டம் உருவாக்கப்படுவதாகவும், இதன் மூலம் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை முதலமைச்சராக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடாகம் ஒன்றில் செய்தி வெளியான கட்டுரை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கனடா நாட்டிலிருந்து இயக்கப்படும் ஆங்கில ஊடகமொன்றில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்கள் சதி திட்டம் ஒன்றை உருவாக்குவதாகவும், அதற்கு கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மூன்று உடந்தையாக இருப்பதாகவும், மேற்படி சதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் என்னை முதலமைச்சராக்குவதாகவும் மிக கற்பனையாக கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருக்கின்றது.

இந்தக் கட்டுரை தொடர்பாக நான் அந்த ஆங்கில ஊடகத்திற்கு உடனடியாகவே எழுத்து மூலமாக என் மறுப்பினை தெரிவித்திருக்கின்றேன். அந்த மறுப்பில் நான் குறிப்பிடுகையில், முதலமைச்சரை கடந்த 30வருடங்களாக நான் அறிந்திருக்கிறேன். அவருக்கு எதிராக சதி திட்டம் உருவாக்குவதாக கூறுவது மித்தவறானது.

நாங்கள் எங்கள் முதலமைச்சருடன் சமகாலத்திலும், எதிர்காலத்திலும் இணைந்தே இருப்போம். மேலும் குறித்த கட்டுரையில் என் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளமை, எனக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றது.

முதலமைச்சர் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுடன், அவரை எங்கள் ஒளிக்கீற்றாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு எதிராக விரலை நீட்டுவதற்கே எவரும் துணிய மாட்டார்கள் என நான் திடமாக நம்புகிறேன்.

எனவே இந்த தெளிவுபடுத்தலை, தங்கள் ஊடகத்தில் உடனடியாக பிரசுரிப்பதுடன், பதிவு செய்யவும் நான் விரும்புகிறேன் என என்னுடைய மறுப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இதேபோன்று மேற்படி கட்டுரையின் மொழி பெயர்ப்பினை தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சில ஊடகங்களும் பிரசுரித்திருப்பதாக நான் அறிகிறேன். அவர்களுக்கும் என்னுடைய மறுப்பு பொருத்தமாக அமையும் என நான் நம்புகிறேன்.

மேலும் இவ்வாறான கட்டுரைகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும், அதன் மாகாண அரசாங்கத்திற்குள்ளும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நான் பார்க்கிறேன் என்றார்.


Similar posts

Comments are closed.