கனடா நாட்டில் குடியேறிய முதல் சீக்கியரின் பெயரில் புதிய பூங்கா

Written by vinni   // January 15, 2014   //

imagesகனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத் தலைவரான அலிசன் ரெட்போர்டும், மனித சேவைகள் அமைச்சரான மன்மீத் சிங் புல்லரும் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். புது டெல்லியில் தங்கள் மாகாணத்திற்கான வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்கும் எண்ணத்துடன் அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை அன்று அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வந்தபின்னர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கனடாவில் குடியேறிய சீக்கியர்களின் தன்னலமற்ற சேவைகள் குறித்து அவர்கள் புகழ்ந்து பேசினார்.

கடந்த 1909 ஆம் ஆண்டில் கடுமையான தட்ப வெப்ப சூழ்நிலைகள் காணப்பட்ட ஆல்பர்ட்டா மாகாணத்தில் குடியேறிய ஹர்நாம் சிங் ஹரி என்றவரின் விவசாய குடும்பத்தினர் அயராத உழைப்பால் அந்தப் பகுதில் உள்ள வளமான விளைநிலங்களைக் கண்டறிந்து விவசாய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் காரணமாக தற்போது கல்கரி நகரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பூங்காவிற்கு அவரது பெயரை சூட்டி கௌரவிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தங்கள் நாட்டில் உள்ள முக்கியமான மருத்துவமனைகள் அனைத்திலும் குருநானக் தேவ் பெயரில் ஒரு பிரிவு செயல்பட்டு வருவதாக மன்மீத் சிங் குறிப்பிட்டார். தங்கள் முன்னோர்களிடமிருந்தும், குருக்களிடமிருந்தும் பெற்றுள்ள நல்ல போதனைகளின் தெய்வீக சக்தியினால் சீக்கியர்கள் செல்வச் செழிப்பினை அனுபவிப்பதாக அவர் கூறினார்.

பஞ்சாப் அரசுடன் இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக ரெட்போர்ட் குறிப்பிட்டார். வேளாண் மற்றும் கால்நடை மரபியல் குறித்த இந்த ஒப்பந்தங்கள் மூலம் பால் பொருட்கள் மற்றும் பன்றி வர்த்தகம் அதிகரிக்கக்கூடும்.

முக்கியமான திட்டங்களில் தொடர்பை ஏற்படுத்தும்விதமாக விவசாய தொழிலாளர் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் ரெட்போர்ட் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.