இலங்கையில் தகவல் அறியும் உரிமையை சட்டமாக்க வேண்டும் – சாவித்திரி குணசேகர

Written by vinni   // January 14, 2014   //

download (2)தகவல் அறியும் உரிமை இலங்கைக்கு இன்று அவசியமாகவுள்ளது. தெற்காசியாவிலுள்ள பல நாடுகளில் இந்த உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இந்த உரிமையை சட்டமாக்க வேண்டும். சுயாதீன நீதித்துறையும் எமக்கு அவசியமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் சட்டத்துறைப் பேராசியருமான சாவித்திரி குணசேகர தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 10 வருடங்கள் நிறைவை முன்னிட்டு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து சர்வதேச ஊடக மாநாடு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு இன்று 13ம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவரும் எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன் பிரவேட் லிமிட்டட்டின் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடசேன் தலைமையில் இன்று மாலை லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே சட்டத்துறைப் பேராசியருமான சாவித்திரி குணசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தகவல் அறியும் உரிமையும் எமது நாட்டுக்கு இன்று அவசியமாகவுள்ளது. தெற்காசியாவிலுள்ள பல நாடுகளில் இந்த உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் மாலைதீவிலும் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டிலும் இந்த உரிமையினை சட்டமாக்க வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வருகின்றன நாடுகள் தகவல் அறியும் உரிமையினை கட்டுப்படுத்துகின்றன. இது சிறந்த நடவடிக்கையல்ல. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்றே தகவல் அறியும் உரிமையும் பொதுமக்களின் உரிமையாகும். தகவல் அறியும் உரிமை மாத்திரம் வழங்கினால் போதும் என்று நினைக்க கூடாது.

இந்த உரிமை போன்றே பொருளாதார உரிமையும் முக்கியமாகும். இந்த உரிமைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகும். இதனால் அனைத்து உரிமைகளை பெறுவதற்குரிய சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இன்று பொதுமக்கள் மத்தியில் இணையத்தளங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. தகவலுக்கான பிரதான மூலகமாக இணையத்தளங்களே இன்று பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இணையத்தளங்கள் அச்சு ஊடகங்களையும் மீறிச் செல்கின்றன. இது எதிர்காலத்தில் அச்சு ஊடகங்களுக்கு பாரிய சவாலாக மாறிவிடும்.

ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை எப்படி முக்கியமோ அதேபோன்று, இணையத்தளங்களுக்கும் ஒழுக்கக் கோவை முக்கியமானதாகும். ஒழுக்கக்கோவை இல்லாவிட்டால் இணையத்தளங்களின் செயற்படுகள் வரையறையின்றி காணப்படும். இதுபோன்றே சுய தணிக்கையிடல் ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்.

ஊடகங்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்களே தவிர ஊடகங்கள் அல்ல. இதனால் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒழுக்கக் கோவை மற்றும் சுய தணிக்கையிடல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இதில் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பபுள்ள உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஊடக நிறுவனங்கள் பாரிய சமூக பொறுப்பு உள்ளது. இதனால் சமூக பொறுப்பு எண்ணக்கருவை ஊடக நிறுவனங்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்றார்.


Similar posts

Comments are closed.