அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்

Written by vinni   // January 14, 2014   //

sivamokanஇராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெறுவதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆதாரத்துடன் காட்டப்பட்ட ஒருவரை தற்போது இல்லை எனக் கூறுவது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் வேடிக்கையானது என வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனான சந்திப்பு தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் இறுதி யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரி வந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தால் கடந்த 2010 ஆண்டு முன்னாள் நீதியரசரான சி.ஆர்.டீ.சில்வா தலைமையில் ஆறு பேர் கொண்ட கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்னும் ஆணைக்குழு(எல்எல்ஆர்சி) நியமிக்கப்பட்டது.

அந்த குழு பரவலாக வாக்கு மூலங்களைப் பதிவு செய்து தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட பரிந்துரைகள் தொடர்பான புத்தகத்தின் 41 ஆம் பக்கத்தில் வட்டக்கச்சியில் வசித்து வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தாயினுடைய மகன் மகிந்தன்(வயது 16) இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெறுவதாக போட்டோவில் காட்டப்பட்டுள்ளது. லங்கா புவத்திலும் அப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதையறிந்து குறித்த தாய் தனது மகனைப் பார்பதற்கு சென்ற போது அப்படியான ஒருவர் தம்மிடம் இல்லை எனக் கூறியுள்ளார்கள். இன்றும் அவர்கள் மனித உரிமை அமைப்புக்கள், அரச அதிகாரிகள் என பலரிடம் சென்று தமது மகனை மீட்டுத் தருமாறு கோரிவருகின்றனர்.

இன்று கணவன், பிள்ளைகள் என யாரும் அற்ற நிலையில் அந்த தாய் தனது 13 வயது மகளுடன் மிகவும் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் போட்டோவில் இருந்த ஒருவரை தற்போது இல்லை எனக் கூறுவது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.