முன்னாள் போராளிகளின் கலை கலாசார நிகழ்ச்சிக்கு இடையூறு

Written by vinni   // January 14, 2014   //

Photo-2013-07-30-__._.-10.05.22-450x298ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க ஆவணப்படம் தயாரிக்கப்படுவதாக தமக்கு கிடைத்த உயர்மட்ட தகவலையடுத்தே 12.01.2013 அன்று முள்ளியவளை கிழக்கில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் கலை கலாசார நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்ததாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ரி.திலகரட்ண தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளின் கலை கலாசார நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் அவர்களுக்கு உரித்துடைய வீடியோ கமராவின் ஒளிநாடா பொலிஸாரால் பறித்தெடுக்கப்பட்டு அது இன்னும் அவரிடம் கையளிக்கப்படாமை தொடர்பாக சீ.ரி.திலகரட்ணவிடம் எமது செய்தி தளத்தின் வடக்கு பிராந்திய விசேட செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவரது இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகனிடம் கேட்டபோது,
முள்ளியவளையில் நேற்றைய தினம் நடைபெற்ற முன்னாள் போராளிகளின் மனவள ஆற்றுகைப்படுத்தல் கலை கலாசார நிகழ்ச்சி தொடர்பான ஒளிப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தேன். அவற்றை நன்றாக அவதானியுங்கள்.

அதில் எமது இனத்துக்காக, நிலத்துக்காக நடைபெற்ற உரிமைப்போரில் தனது இரண்டு கண்களையும் இழந்த போராளி ஒருவர் “ஒக்ரபாட்” கருவியை இசைத்துக்கொண்டிருக்கின்றார். அது ஒரு அபரிமிதமான விசயம் அல்லவா. அவர் மட்டுமல்ல அவரைப்போலவே முழுக்க முழுக்க போரில் வழுவிழந்த போராளிகளாலும், சிறுவர் சிறுமிகளாலுமே குறித்த கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அவர்கள் சிறிய வயதினர் தான். ஆனால் எத்தகைய கலைகள், திறமைகள் அவர்களிடம் பொதிந்து கிடக்கின்றன. நிச்சயம் அவர்களை பாராட்டி மதிப்பளித்து கௌரவிக்கும் மனம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

யுத்தத்துக்குப்பின்னரான சூழலில் தமிழ் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் பெரும் பாரபட்ச நிலைமைகள் காட்டப்படுகின்றன. அதிலும் மாற்று வலுவுள்ளவர்களின் நிலைமையோ மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது.

ஆகையால் அவர்களுடைய வாழ்க்கைத்தர மேம்பாடு, பொருளாதார நிலைமைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டிய பெரும் பணி எம்மிடம் இருக்கின்றது.

அவர்களுடைய திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து சர்வதேச தொண்டு நல அமைப்புகளினதும், புலம் பெயர் தமிழர்களினதும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், அவர்களுக்கென்றே ஒரு மறுவாழ்வு நிதியத்தை ஏற்படுத்துவதற்குமே குறித்த கலை கலாசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் ஏன் அர்த்தம் கொள்ளக்கூடாது? என அவர் பதிலளித்தார்.


Similar posts

Comments are closed.