இலங்கையின் போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா

Written by vinni   // January 13, 2014   //

amaricaஇலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தின் இந்த போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்து வந்தது.

ஐ.நா.சபை மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு முறை இந்த பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவும் இந்த தீர்மானத்தை ஆதரித்து இருந்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் 3-வது முறையாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது.

அதற்கு முன்பாக, அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே.ராப் என்பவர், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் குறித்து ஆதாரங்களை திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கு பகுதியில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின் முடிவில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இறுதி கட்ட போரின்போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து, இலங்கை அரசு சுதந்திரமான நம்பகத்தன்மைவாய்ந்த விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்க தூதர் தனது சுற்றுப்பயணத்தின்போது, இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்களிடம் இருந்து அவர் சாட்சியங்களை பதிவு செய்து, புகைப்பட ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் தூதர் ராப், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலங்கையின் வெளியுறவு துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ்சை சந்தித்துப் பேசினார். முன்னதாக ராப்பின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


Similar posts

Comments are closed.