நலன்புரி நிலைய மக்கள் மீளக்குடியமர வேண்டும்; புதிய யாழ். தளபதியிடம் பிரதேச செயலர் கோரிக்கை

Written by vinni   // January 11, 2014   //

Major-General-Udaya-Perera-313x360அகதி முகாம் வாழ்வு இனி மேல் இருக்கக்கூடாது. நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் உதய பெரேராவிடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார் வலி.வடக்குப் பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனன்.    மல்லாகம் கோணப்புலம் முகாமில் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தைப் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆரம்பித்து வைத்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.   இதன் பின்னர் முகாம் மக்களுடன் பேசிய இராணுவத் தளபதி உதய பெரேரா, வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பொருத்தமான இடங்களில் மீளக்குடியமர்த்த மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.   பிரதேச செயலர் தனது உரையில், சொந்த மண்ணிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருப்பது தொடர்பில் இராணுவத்தள பதியிடம் தெரிவித்திருக்கின்றேன்.

அவர் கவனமாக அனைத்தையும் செவிமடுத்திருக்கின்றார்.    இராணுவத்தினர் மேற்கொள்ளும் மக்களின் மீள்குடியமர்வு முயற்சிகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.    அகதி வாழ்வு முடிவுக்குக் கொண்டுவரவப்பட வேண்டும்.அதுவே இந்த மக்களின் விருப்பமாக இருக்கின்றது. எனவே அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.   பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு தலா 500 ரூபா வீதம் மாதாந்தம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை புதிய தளபதி நேற்று மல்லாகம் கோணப்புலம் முகாமில் ஆரம்பித்து வைத்தார்.   இதன்போது நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் தம்மைச் சொந்த இடங்களில் வாழ அனுமதிக்குமாறு இராணுவத் தளபதியிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்தனர். நிகழ்வு முடிந்து தளபதி வெளியேறுகையில் அவரைச் சூழ்ந்த நலன்புரி நிலைய மக்கள், தங்களின் சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

23 வருடங்களாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்வதாகவும், தாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.    இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என்பது தான் ஜனாதிபதியின் கொள்கையாகவும் உள்ளது. உங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்குரிய சாத்தியபாடுகள் இருந்தால் அங்கு குடியமர்த்தப்படுவீர்கள்.    இல்லைனில் பொருத்தமான இடத்தில் மீளக்குடியமர்த்தப்படுவீர்கள் என்று தெரிவித்தார். இந்த மீள்குடியமர்வு நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.   யாழ். குடாநாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 1996 ஆம் ஆண்டு மீள்குடியமர்த்தப்பட்டவர்கள்தான்.

இன்னமும் ஒரு சதவீதமானோரே மீளக்குடியமர்த்தப்படவில்லை என்றும் தளபதி குறிப்பிட்டார்.   யாழ்ப்பாணம் அடுத்த மும்பை   தனக்கு யாழ்ப்பாணம் புதிதில்லை என்று குறிப்பிட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டினனாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் அன்றைய யாழ்ப்பாணத்துக்கும் இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பெரியளவிலான மாற்றங்கள் இருப்பதாகவும் கூறினார்.   போர் முடிந்து 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் வேகமாக அபிவிருத்தி அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் அடுத்த மும்மை என்றும் அவர் கூறினார். நான் பதவியேற்தும் முதல் வேலையாக மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளேன்.    பெற்றோர்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்.

கிளிநொச்சியில் நான் இராணுவத் தளபதியாக இருந்த பொழுது 2 ஆயிரத்து 600 சிறுவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியுள்ளேன். இந்தப் புலமைப் பரிசில் வழங்குவதற்கான பணம் லண்டனிலுள்ள விக்கி விஜசிங்க 5 லட்சம் ரூபாவும், ரட்ணி ஒக்னர்ஸ் ஒன்றரை லட்சம் ரூபாவும் வழங்கியுள்ளனர். இது அவர்கள் க­டப்பட்டு சம்பாதித்த பணம் என்றும் தளபதி கூறினார்.   நிம்மதியான வாழ்வு   இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய முகாம் தலைவர் அன்ரனி குயின், மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்துள்ளதாகவும் அதற்கு அரசுக்கு நன்றி சொல்வதாகவும் தெரிவித்தார்.   பெற்றோர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் அவர்கள் செய்ய முடியாததை இந்த அரசு செய்து முடித்திருப்பதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்


Similar posts

Comments are closed.