திருப்பதிக்கு இனி செல்போன் மூலம் காணிக்கை போடலாம்

Written by vinni   // January 11, 2014   //

thirupathi_002திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைப்பேசி மூலம் உண்டியலில் காணிக்கை செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
திருமலையில் உள்ள ஆந்திரா வங்கி கிளையில் அதன் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சி.வி.ஆர். ராஜேந்திரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் நிரூபர்களிடம் கூறுகையில், திருமலையில் தேவஸ்தானத்துக்காக லட்டு கவுன்டர், அறைகளுக்கான முன் பணம் வழங்கும் கவுன்டர், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை மையம், விஐபி பிரேக் மற்றும் சேவை டிக்கெட்டுகள் விற்பனை என 40 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மற்றும் வாடகை வசூலிக்கும் தொகையும் எங்கள் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது எஸ்எம்எஸ் மூலமாகவும், ஏடிஎம் மையங்கள், இணைய தளம் மூலமாகவும் திருப்பதி கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கைப்பேசி மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் திட்டத்தில் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், 2 நிமிடத்தில் திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம். இந்த காணிக்கைகள் நேரடியாக தேவஸ்தானம் சார்பில் உள்ள உண்டியல் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒருமுறை கைப்பேசி மூலம் ஒரு ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை காணிக்கையாக செலுத்தலாம். குறிப்பாக, கைப்பேசி மூலம் ரூ.50 ஆயிரத்தை ரூ.5 ஆயிரம் வீதம் 10 முறை செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே பெற முடியும்.

அதற்கு மேல் காணிக்கை செலுத்த வேண்டும் என்றால் ஏடிஎம் மையத்தில் அதற்கான விண்ணப்பம் பெற்று அதன்மூலம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உண்டியல் கணக்கில் பணம் செலுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் பணபரிமாற்றம் இன்றி நேரடியாக வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை பரிமாற்றம் செய்யப்படுகிறது என்றும் இதுகுறித்து மேலும் விவரம் அறிய 1800 425 2910 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.