தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; விக்னேஸ்வரன்

Written by vinni   // January 11, 2014   //

vikneswaranதமிழர்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடுகள் அறியாத இராணுவத்தினர் வடக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை. இதனையே மக்களும் கேட்கின்றனர்.    தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இனரீதியான கற்கைகளுக்கான சர்வதேச மையத்தின் ஏற்பாட்டில் “வடக்கில் ஜனநாயகத்துவம்’ என்னும் தலைப்பிலான கருத்துப் பகிர்வு நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

போரின் மாற்றங்களை வட மாகாணத்தில் நாம் உணரக்கூடியதாக உள்ளது. ஆட்சிமுறை, அபிவிருத்தி என்பது தொடர்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசுக்கும் மக்களும் இடையில் நல்லாட்சி முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.   வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் வடமாகாண சபையானது நல்லாட்சி உரையாடல் தொடர்பானது. சிவில் உத்தியோகத்தர்கள் சிறியதாகத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

  எனினும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு வடமாகாண சபை செயற்பட வேண்டியுள்ளது. அரசியல் கட்டமைப்புக்கள் மரபு ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும். வடமாகாணத்தில் இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என நாம் வலியுறுத்துவது இதனால் தான்.   சொந்தக் காணியில் பயிரிட முடியவில்லை வடக்கு மாகாணத்தில் போர் முடிந்து 5 வருடங்கள் கடந்தும் எமது மக்களைக் கொன்றுகுவித்த இராணுவத்தினர் பாதுகாப்புக்கு இருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதனால் பாதுகாப்பு இல்லை.    மக்கள் தமது சொந்தக் காணிகளில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

ஆனால் அவர்களின் நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.    ஹோட்டல்கள்தேவையில்லை மக்கள் பெருந்தெருக்களின் அபிவிருத்தியையும் ஹோட்டல்களின் வருகையையும் எதிர்பார்க்கவில்லை. தமக்கான பாதுகாப்பு, சுதந்திரம் இவற்றைத்தான் கேட்கிறார்கள். மக்களின் தேவை சரியாக நிறைவேற்றப்பட வேண்டும்.   இதற்கான வேலைத்திட்டத்தை வடமாகாண சபை முன்னெடுக்கும். தற்போது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து அரசின் உதவியுடன் கிராம ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதற்கு இராணுவ ஆட்சி தேவைப்படாது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆளுநர் வடமாகாண சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.   அத்துடன் தொழில்சார் முன்னேற்றங்களைக் காண வடக்கு மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற தொழில்சார் நிபுணர்கள் மீண்டும் வடமாகாணத்துக்கு அழைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.   இவ்வாறானதொரு மாற்றங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் வடமாகாணத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் – என்றார்.


Similar posts

Comments are closed.