தங்கள் நாட்டிற்கான விசாக்களை ஏலத்தில் விட இங்கிலாந்து முடிவு

Written by vinni   // January 10, 2014   //

passport-india-visaபொதுமக்களிடத்தில் அதிக நிதியினைப் பெற்று அவர்களை சிரமப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாகவும் அதே சமயம் தங்கள் நாட்டிலுள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேம்பாட்டிற்கான பெரும் வெளிநாட்டு முதலீடுகளைத் திரட்டவும் இங்கிலாந்தின் இடம்பெயர்தல்(மைகிரேஷன்) ஆலோசனைக் குழு புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றது.

இந்தக் குழுவின் தலைவரான சர் டேவிட் மெட்காஃப் தங்கள் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க புதிய வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதன் ஒரு பிரிவாக அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு நன்கொடை அளிப்போருக்கு அந்நாட்டின் விசா பெறுவதற்கான அனுமதியை அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

இத்தகைய விசாக்கள் ஏலத்தில் விடப்படுவது குறித்து நன்கு பரிசீலிக்கப்பட வேண்டும். அதேபோல் கேம்பிரிட்ஜ் கல்லூரி, மருத்துவ கல்வி நிறுவனம் அல்லது லண்டனில் உள்ள பொருளாதாரக் கல்வி நிலையம் போன்றவற்றிற்கு 10 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை அளிப்போருக்கு இத்தகைய விசாக்கள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும் இந்தத் திட்டம் நம்பத் தகுந்ததாக அமையும் என்பதற்கான ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு பிரிட்டனின் உள்துறை செயலர் தெரிசா மே ஆலோசனைக் குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்கொடை அளிப்பதன்மூலம் குற்றவாளிகள் நாட்டிற்குள் புகுந்துவிடாதபடி கவனிப்புடன் கூடிய செயல்முறை கண்காணிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஆலோசனைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.