18 நிமிடங்கள் மாத்திரம் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கிய பயங்கரவாதத் தடுப்பு காவல்துறை

Written by vinni   // January 8, 2014   //

 vavunija_2கிளிநொச்சியில் திடீரென மரணமடைந்த தன்னுடைய 16 வயதான மகனுக்கு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (வயது 48) இன்று 18 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் மேலும் சில மணித்துளிகள் அங்கு நிற்பதற்கு அனுமதிக்குமாறு உறவினர்கள் கோரிய போதிலும் அதற்கு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் அனுமதிக்கவில்லை. மீறி மறித்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

தனது மகனான நிதர்ஷனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தனது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில், சிறைச்சாலை அதிகாரிகள் அறுவரும் பொலிஸார் 11 பேரும் அவரது கணவனை, இன்று முற்பகல் 11 மணியளவில் அவரது வீட்டு அழைத்துவந்தனர். இதனை முன்னிட்டு அந்த பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இறுதி கிரிகைகளில் பங்கேற்கவும் சுடலைக்கு செல்வதற்கும் அவருக்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு பயங்கரவாதப் பொலிஸார் இணக்கம் தெரிவிக்காமல் சுமார் 18 நிமிடங்களில் அவரை அழைத்து சென்றுவிட்டனர்.

மனைவி மற்றும் மகள்மார் உள்ளிட்ட உறவினர்களுடன் அவரை கதைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் பொங்கியெழுந்த உறவினர்கள் சுடலை வரை அவரைச் செல்வதற்கு அனுமதிக்குமாறு அழுத்தமாக கோரியபோது துப்பாக்கி முனையில் அவர்களை அச்சுறுத்திவிட்டு அழைத்துச் சென்றுவிட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட வீரலிங்கம் ஐந்து வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி மகஸீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.