பனி மலை உடைந்தது: இரு கப்பல்களும் மீட்பு

Written by vinni   // January 8, 2014   //

antarctica_ship_trapped_001ரஷ்ய கப்பல் அகடெமிக் ஷோகல்ஸ்கி மூலம் விஞ்ஞானிகள், சுற்றுலாப் பயணிகள், பத்திரிகையாளர்கள் என 74 பேர் கடந்த நவம்பர் மாதம் அண்டார்டிகா நோக்கிப் புறப்பட்டனர்.
அண்டார்டிகா ஆராய்ச்சியாளரான அஸ்திரேலியாவின் சர் டக்லஸ் மாசனின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட இவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அண்டார்டிகாவை நெருக்கியபோது கடந்த டிசம்பர் 24-ம் திகதி அவர்களது கப்பல் கடலின் உறைபனியில் சிக்கி நிலைகொண்டது.

இதனை மீட்கும் முயற்சியில் பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலிய கப்பல்கள் ஈடுபட்டன. ஆனால், வானிலை கடும் குளிராக மாறியதால் பனிக்கட்டிகள் சூழ்ந்த ரஷ்ய கப்பலை மீட்கமுடியவில்லை.

இதையடுத்து ரஷ்யக்கப்பலில் இருந்த 52 பயணிகள் சீனக்கப்பலின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அவுஸ்திரேலியக் கப்பல் அரோராவிற்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் சீனக்கப்பலும் பனியால் சூழப்பட்டது. இதையடுத்து ரஷ்யப்பயணிகளுடன் அவுஸ்திரேலிய கப்பல் கடந்த 2 நாட்களுக்கு முன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது.

இந்நிலையில், அண்டார்டிகா பகுதி காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வானிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து 4 மீட்டர் உயரத்திற்கு சூழப்பட்ட பனிக்கட்டிகள் மெல்ல உடைய ஆரம்பித்தன. இதனால் பனியின் பிடியில் இருந்து இரண்டு கப்பல்களும் விடுபட்டன.

பின்னர் சீனக்கப்பலானது பனிக்கட்டிகளை உடைத்துகொண்டு 14 மணி நேரத்திற்கு பிறகு 101 மக்களுடன் தண்ணீர் பகுதிக்கு வந்தது. 22 சிப்பந்திகளுடன் ரஷ்யக்கப்பலும் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, 20 மைல் தூரம் வந்துவிட்டதாக கேப்டன் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த இருகப்பல்களையும் மீட்கச்சென்ற அமெரிக்க கப்பற்படை கப்பல் போலார் ஸ்டார் தனது பயணத்தை ரத்து செய்து திரும்பியது.


Similar posts

Comments are closed.