மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் : ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண

Written by vinni   // January 7, 2014   //

1360211118மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.   மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன.    இந்த நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஏனென்றால், போர்க் காலத்தின் போது படையினரிடம் மக்கள் சரணடைந்தார்கள்.

அதேபோல், அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.    ஆனால், இன்னமும் இவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. ஆகவே, மன்னாரில் தற்போது மீட்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் சடலங்கள் இவர்களுடையதாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசு இதை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, இதுகுறித்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக மேற்கொண்டு உண்மையை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும்” என்றார்.


Similar posts

Comments are closed.