அமெரிக்காவின் வற்புறுத்தலை மீறி 88 கைதிகளை விடுதலை செய்ய ஆப்கன் அரசு முடிவு

Written by vinni   // January 6, 2014   //

76d2066c-c7ed-472d-8ceb-5a604cef8cb9_S_secvpfஆப்கானிஸ்தானில் கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்களின் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ ராணுவப்படைகள் 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் அந்நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகத் தீர்மானித்துள்ளன. நேட்டோ வீரர்கள் விலகுவதைத் தொடர்ந்து தலிபான்களின் தாக்குதல்கள் இங்கு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தங்களின் வீரர்கள் இங்கு நீட்டிக்கப்பட வேண்டுமானால் இரு நாடுகளுக்குமிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படவேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டது. இதனை ஏற்றுக்கொள்ள ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் மறுத்ததால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள உறவு அவ்வளவு சுமூகமானதாக இல்லை.

இந்த சமயங்களில் ஆப்கானில் கைது செய்யப்பட்டிருந்த போர்வீரர்கள் அனைவரும் தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பக்ராம் விமான தளத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். ஆப்கன் அரசுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து சமீபத்தில்தான் அமெரிக்கா இந்த கைதிகளை ஆப்கானிஸ்தான் அரசு பொறுப்பின்கீழ் மாற்றியது. இந்தக் கைதிகளை விடுவிக்க ஆப்கன் அரசு முடிவு செய்தபோது அமெரிக்கா அவர்கள் அயல்நாட்டுப் படை வீரர்களைக் கொன்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், விடுதலை செய்யப்பட்டால் தேசத்தின் பாதுகாப்பிற்கே அவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அளிக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்யும்படி அதிபர் கர்சாய் ஆய்வுக் குழு ஒன்றினை அமைத்தார். ஆயினும் ஆய்வுக் குழுவின் தலைவரான அப்துல் ஷகோர் தத்ராஸ் இதுவரை தாங்கள் பார்த்த அறிக்கைகள் இந்தக் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்படவேண்டிய அளவிற்கு எந்தவித ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்று நேற்று தொலைபேசித் தகவல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் குறிப்பிட்டபடி 88 கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் உறவு சீர்குலைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் வற்புறுத்தலையும் மீறி இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதுபோல் விடுதலை செய்யப்படுபவர்களில் பெரும்பாலோர் மீண்டும் போர்க்களத்துக்கே திரும்புவதால் ஆப்கனின் உயர் அதிகாரிகளும் இதுகுறித்து எச்சரிக்கையைத் தெரிவிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.