இந்தியத் தூதர் தேவயானியை சோதனை செய்வது போன்ற வீடியோ காட்சி பொய்யானது

Written by vinni   // January 5, 2014   //

Devyani-Khobragade-PTIஇந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே நியூயார்க்கில் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது ஆடைகளைக் களைந்து போலீஸார் சோதனை செய்வது போல சமூக இணையதளங்களில் தற்போது காட்டப்பட்டு வரும் சிசிடிவி பதிவுகள் போலியானவை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடியோ காட்சிகள் ஆபத்தானதாகவும், ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அந்த விடியோ காட்சிகளில் இருப்பது தேவயானி கிடையாது. எனவே, இதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகவும்.

அந்த விடியோ காட்சிகளில் உள்ள நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல், சில சமூக இணையதளங்கள் அதை ஒளிபரப்பி வருகின்றன.

கண்டனம்: பொறுப்பற்ற முறையில் உருவாக்கப்பட்ட அந்த ஆபத்தான விடியோ தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அந்த விடியோ காட்சிகள் தொடர்பாக அமெரிக்க காவல் துறையினரிடம், வெளியுறவுத் துறை சார்பில் விவாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வீடியோ காட்சி போலியானது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். வீடியோவில் காட்டப்படும் பெண்ணிடம் சோதனை செய்வது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஏனெனில், அமெரிக்க காவல் துறையினர் சோதனை செய்யும் முறை வேறு மாதிரியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

எனினும், அந்த விடியோ காட்சியை நான் பார்க்கவில்லை. இருந்தபோதிலும், அந்த விடியோ போலியானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று மேரி ஹார்ஃப் கூறினார்.

பின்னணி: பணிப் பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை அமெரிக்க போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர்.

அப்போது, அவரது ஆடைகளைக் களைந்து போலீஸார் சோதனை செய்ததாகவும், குற்றவாளிகளுடன் அவரை காவலில் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பதிவுகள்: போலீஸ் காவலில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைந்து போலீஸார் சோதனை செய்வது போலவும், அப்போது அப்பெண் கதறி அழுவது போலவும் மேற்குறிப்பிட்ட அந்த விடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.