முஷாரப்புக்கு உண்மையில் மாரடைப்பு ஏற்பட்டதா?

Written by vinni   // January 4, 2014   //

musharaf-slider-150x125இஸ்லாமாபாத்:நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தப்பிக்க முஷாரப் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது போல் நாடகமாடுகிறாரா என்பது குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 2 நாட்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. முதல் நாள் முஷாரப் ஆஜராகவில்லை. நேற்று நீதிமன்றத்துக்கு வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி நெஞ்சை பிடித்து கொண்டார். இதையடுத்து ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

‘அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முஷாரபின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்று அவரது செய்தி தொடர்பாளர் ரசா போஹ்ரி தெரிவித்தார்.

முஷாரப் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவருக்கு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அதுகுறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்’ என்றனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தம்பதியின் மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ (29) தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தேச துரோக வழக்கு விசாரணையை தாமதப்படுத்த உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது போல் முஷாரப் நாடகமாடுகிறாரா என்று தெரியவில்லை. உண்மையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ குழுவினர் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.