போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்குப் பயணம்

Written by vinni   // January 4, 2014   //

rappஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 5ம் நாள் தொடக்கம், 11ம் நாள் வரையான காலப் பகுதியில் ஸ்டீபன் ஜே ராப் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புகளினதும் தலைவர்களையும் சந்தித்து சிறிலங்காவில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்க முயற்சிகள் குறித்து பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விவகாரங்களைக் கையாள்வதற்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

இதற்கு முன்னர் அவர், 2012 மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா முன்வைப்பதற்கு முன்னர், கடந்த 2012 பெப்ரவரி மாதம், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

வரும் மார்ச் 3ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்டீபன் ஜே ராப் மீண்டும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.


Similar posts

Comments are closed.