பனிக்கட்டிக் கப்பலின் பயணிகள் மீட்பு

Written by vinni   // January 3, 2014   //

helicopter_crew_antarctica_003தென்துருவ கடற்பரப்பை நோக்கிய பயணத்தில் பனிக்கட்டிகளில் சிக்கிய கப்பலில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

ரஷ்யக் கொடியுடன் கூடிய Akademik Shokalskiy என்ற கப்பல் கடந்த 24ஆம் திகதி தொடக்கம் பனிக்கட்டிகளில் சிக்கி நகர முடியாத நிலையில் இருக்கிறது.

இந்தக் கப்பலில் மொத்தமாக 74 பேர் இருந்தார்கள். இவர்களில் விஞ்ஞானிகள், சுற்றுலா பயணிகளில் அடங்கலாக 52 பேர் ஹெலிகொப்டர்கள் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சொந்தமான என்ற கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். தற்போது மாலுமிகள் மாத்திரமே ரஷ்யக் கப்பலில் எஞ்சியிருக்கிறார்கள்.

இந்தக் கப்பல் அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாநிலத்தின் தலைநகர் ஹொபார்ட்டில் இருந்து சுமார் 1,500 கடல் மைல் தூரத்தில் தென்திசையில் அமைந்துள்ள கடற்பரப்பில் சிக்கியிருந்தது.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர், டக்ளஸ் மோசன் என்ற ஆய்வாளர் பயணித்த வழியில் சென்று தென்துருவத்தை ஆராய்ச்சி செய்யும் பணிகளுக்காக ரஷ்ய கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

மீட்புக்கப்பல்கள் அருகில் நெருங்க இயலாததால் சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டரை உபயோகித்து அந்தப் பயணிகளை அவுஸ்திரேலியக் கப்பலுக்கு இடம்மாற்ற நேற்று காலை மீட்பு நிறுவனம் முயற்சித்தது.

பனிக்காற்றின் தாக்கமும், தொடர்ந்த பனிப்பொழிவும் இந்த முயற்சிக்கு தடையை ஏற்படுத்தும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது. வானிலை சற்று மாறும் வரை காத்திருக்கவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

ஆனால் நேற்று பிற்பகல் சூழ்நிலை சாதகமானதைப் பயன்படுத்தி சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் 12 பேர் கொண்ட குழுவாக 52 பயணிகளும் பத்திரமாக அவுஸ்திரேலியக் கப்பலுக்கு இடம் மாற்றப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் கடல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சிக்கலானதாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருந்த தங்களது மீட்பு நடவடிக்கை எந்தவிதத் தடைகளுமின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது குறித்து அண்டார்டிகா பயணத் திட்டத்தின் தலைவரான கிரிஸ் டர்னே தனது நிம்மதியினை வெளிப்படுத்தினார்.

தங்களை பத்திரமாக மீட்ட சீன மீட்புக் கப்பல் மற்றும் அவுஸ்திரேலிய மீட்புக்கப்பலின் அண்டார்டிகா பிரிவினருக்கு தனது நன்றியை வெளிப்படுத்துவதாக டர்னே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.