சட்டவிரோத படகு அகதிளை காப்பாற்றியது இத்தாலிய கடற்படை

Written by vinni   // January 3, 2014   //

2005_S1237_02.JPGமத்தியத் தரைக்கடல் வழியே சட்டவிரோதமாக இத்தாலிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்தது. இவர்களில் ஏராளமானோர் வழியில் ஏற்பட்ட விபத்துகளில் பலியாகினர்.
கடந்த அக்டோபர் மாதம் எரிடேரியா பகுதியிலிருந்து கடல்வழியே வந்த அகதிகளின் படகு இத்தாலியின் லாம்பிடுசா என்ற தீவுக்கருகில் மூழ்கியதில் 366 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து இவ்வாறு சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்ற பிரச்சாரத்தினை இத்தாலிய அரசு மேற்கொண்டது. அவ்வாறு வருபவர்கள் இத்தாலிக்குள் குடிபுக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு குறிப்பிட்டது.

சர்வதேச ரோந்துப்பணியினை மத்தியத் தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும்படியும் ஐ.நாவை கேட்டுக்கொண்டது. இருப்பினும் அகதிகளின் வருகை குறைவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், இத்தாலியின் தீவுப்பகுதியான சிசிலிக்குத் தென்பகுதியில் நேற்று மாலை இத்தாலியக் கடற்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 10மீ நீளம் கொண்ட படகு ஒன்றில் 233 பேர் மத்தியத் தரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் எரிடேரியா, நைஜீரியா, சோமாலியா, சாம்பியா, மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவரையும் காப்பாற்றிய இத்தாலிய கடற்படையினர், அவர்களை சிசிலியின் கிழக்குக் கடற்கரை அருகே உள்ள சிராகியுஸ் என்ற துறைமுகத்தில் இறக்கி விட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.