சிறுவர் இல்ல சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்

Written by vinni   // January 3, 2014   //

jailஅநுராதபுரம், அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றும் அதற்கு உதவிய மூவரையும் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான்-மேலதிக மாவட்ட நீதிபதி ருவந்திகா மாரபன உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம், அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 16,15 வயதுடைய சிறுமிகள் மூவர் கடந்த டிசம்பர் 19ம் திகதி சிறுவர் இல்லத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

மாத்தளை – யட்டவத்த பகுதியில் இருந்த இம்மூன்று சிறுமிகளில் ஒருவரை அழைத்துச் சென்றவர்கள் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய அநுராதபுரம் பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு சந்தேகநபர்களை கைது செய்தது.

சிறுவர் இல்லத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அங்கிருந்து வெளியேறியதாக சிறுமிகள் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சிறுமிகளை சாலியபுர சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் சிறுமிகள் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை, சிறுவர் இல்ல அறிக்கை என்பவற்றை சமர்பிக்குமாறு அநுராதபுரம் பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Similar posts

Comments are closed.