நவிப்பிள்ளையின் தூதுக்குழு இலங்கைக்கு வரும் சாத்தியம்

Written by vinni   // January 3, 2014   //

navaஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.   எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்புவரும் எனத் தெரிய வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து மார்ச் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்தக் குழுவின் பயணம் அமையவுள்ளது.   சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே தமது உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா.ஆணையர் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு அனுப்புகிறார் எனக் கூறப்பட்டாலும் இதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அதேவேளை, இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் நேரடியாக பேச்சு நடத்துவதற்கு தமக்கு நேரம் வழங்குமாறுகோரி சில மனித உரிமைகள் அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.   இதன்படி, ஜெனிவாவில் நடைபெறும் உபமாநாடுகளின் போது பெரும்பாலும் இந்தச் சந்திப்புகள் இடம்பெறலாம் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. ஆணையாளருடன் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டுள்ளது என்பதை ஒரு முக்கிய அமைச்சு நேற்று மாலை உதயனிடம் உறுதிப்படுத்தியது.   அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பிலும், தமது பயணத்தின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் குறித்தும் அறிக்கை வெளியிடவுள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத தொடரில் அவர் வாய்மூல அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது தெரிந்ததே.


Similar posts

Comments are closed.