இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது

Written by vinni   // January 2, 2014   //

warcrime-pictureஇலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது.

அதற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01) மாலை நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை அவசியம். யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அரசியல் தீர்வு எட்டப்படவில்லை.

ஆயுத ரீதியான போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் முடிந்த பின்னர் ஒரு தீர்வு எட்டப்படும் போதே உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சாத்தியப்பாடானது. ஆனால் இந்த நியதிக்கு மாறாக இலங்கையில் இதனை நடைமுறைப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பொதுநாலவாய மாநாட்டுக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியிடம் அங்கு இந்தப் பொறிமுறையை அமுல்படுத்தி எவ்வாறு பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டது என்பது தொடர்பிலும் அதனை இங்கு அமுல்படுத்துவதன் மூலம் இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுவது குறித்தும் இலங்கை அரசாங்கம் கருத்து தெரிவித்து இருந்தது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பிரச்சனையின் போது சம்மந்தப்பட்ட இருதரப்பு ஒரு இணக்கப்பாட்டுக்குள் வந்து தங்களுக்குள் பரஸ்பரம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது ஆனால் இங்கு அவ்வாறு இல்லை.

வெறுமனவே போர் குற்றம் மட்டும் நடந்திருந்தால் போரில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு தீர்வின் ஊடாக பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராயலாம் ஆனால் இங்கு நடந்தது திட்டமிட்ட ஒரு இனவழிப்பு அதற்கு பொது மனிப்பு வழங்க முடியாது.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும் இன்றும் திட்டமிட்டவகையில் இன அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாயக் கருத்தடை கூட ஒரு இன அழிப்பின் அடையாளமே.

இந் நிலையில் தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமானா ஆணைக்குழு என்ற பொறிமுறை இங்கு சாத்திப்பாடானது அல்ல. நாம் அதற்கு இணங்கி போக முடியாது. அப்படி யாராவது இணங்கி போனால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இலங்கையை பொறுத்தவரைக்கும் திட்டமிட்ட தமிழ் மக்களின் மீதான இனவழிப்பை நிறுத்துவதன் ஊடாகவே தீர்வை எட்டலாம் என தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.