பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் !

Written by vinni   // January 2, 2014   //

war-crimes1இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பொறிமுறை சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முண்னணி, இங்கு இடம்பெற்றுவருகின்ற இன அழிப்பிற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையே அவசியமெனவும் கோரியுள்ளது.

இன அழிப்பிற்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்மான பொறிமுறை பொருத்தப்பாடற்றதென நிராகரித்துள்ள மேற்படி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதனை இங்குள்ள தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமாயின், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று காலை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஊடகவியியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்த் தேசியத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு ஜனநாயகமும் இல்லாத நிலையில், அராஜக இராணுவ ஆட்சியே நடக்கின்றது.

இந்நிலையில், இங்கு இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு பொறிமுறை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் தென்னாபிரிக்கா அரசின் ஆதரவுடன் மேற்கொளப்பட்டு வருகின்றது.

ஆனால், அவ்வாறான பொறிமுறை கொண்டு வருவதாயின், இன அழிப்பிற்கு ஒருபோதும் சாத்தியப்பாடற்றது என்றும், அதனால் அதனை அடியோடு நிராகரிக்கின்ற அதே வேளையில், தமிழ்த் தரப்பு சார்பாக இதனை ஏற்றுக் கொள்கின்றவர்கள் எவராயினும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்கின்ற மாபெரும் துரோகமென்றும் குறிப்பிட்டார்.

இங்கு இடம்பெற்றது இன அழிப்பு என்றே நாம் தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவ்வாறில்லை என தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு இங்கு இன அழிப்பு நடைபெறவில்லை என அரசிற்கு வக்காலத்து வாங்குகின்ற தரப்பினர்கள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென இவ்வாறு செயற்படுவதாகவும், யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றனர் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் மக்கள் தெளிவானதொரு நிலையை மண்ணிலும், புலத்திலுமுள்ளவர்கள் எடுக்க வேண்டும். அதாவது, வெற்றுக் கோசங்களுக்கு எடுபடாமல் சிறந்ததொரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது கட்சியன் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் இளைஞரணித் தலைவர் மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


Similar posts

Comments are closed.