புத்தாண்டு தினத்தில் வெடித்தது நட்புக்கான வாத்து

Written by vinni   // January 1, 2014   //

rubber_duck_001நெதர்லாந்து கலைஞரான ஃபிலாரென்டிஜின் ஹாப்மென் கடந்த 2007 ஆம் ஆண்டில் 16.5 மீட்டர் உயரமுடைய பிரம்மாண்டமான மஞ்சள் வாத்து ஒன்றினை உருவாக்கி மக்களிடையே நட்புறவை வளர்க்கும்வண்ணம் ஒவ்வொரு நாட்டின் கடற்பகுதியிலும் மிதக்கவிட்டார்.

பிரேசில், அவுஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற ஒன்பது நாடுகளில் உள்ள 13 நகரங்களில் இந்த வாத்து மிதக்கவிடப்பட்டு பெரும்பான்மையான மக்களின் வரவேற்பையும் பெற்றது.

தற்போது மீண்டும் 2013 ஆம் ஆண்டில் தைவானைச் சேர்ந்த மூன்று நகரங்களின் கடற்பரப்புகளில் 18 மீட்டர் உயரத்தில் செய்யப்பட்ட புதிய வாத்து மிதக்க விடப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் மோசமான வானிலை காரணமாக இந்த கண்காட்சி நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதம் கவோசியுங் நகரத்தில் ஒரு மாதம் இந்த வாத்து மிதக்கவிடப்பட்டபோது நான்கு மில்லியன் மக்கள் இதனைக் கண்டு களித்தார்கள். அப்போது ஏற்பட்ட உசாகி புயலிலிருந்து பாதுகாக்க வேண்டி இந்த வாத்து வெளியே எடுக்கப்பட்டது. கடந்த மாதம் டவோயுவான் நகரக் கடற்பகுதியில் இந்த வாத்து மிதக்கவிடப்பட்டிருந்தபோது 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டு மின்சாரம் தடைப்பட்டது. இதனால் இந்த வாத்திற்கு காற்று செலுத்தும் குழாய் செயல்படாமல் இந்தக் கண்காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

நிலைமை மீண்டும் சீரானதும் மிதக்கவிடப்பட்டபோது ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் வாத்தின் பின்புறம் உடைந்தது. அதன்பின்னர் நிகழ்ச்சியாளர்கள் வேறொரு வாத்தினை வைத்து இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

தற்போது கீலங் துறைமுகத்தில் மிதக்கவிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான வாத்து புது வருட இரவான இன்று பெரிய கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்த்த நிகழ்ச்சியாளர்கள், இன்று நள்ளிரவு வரை இதனை மிதக்க விட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்று மதியம் எதிர்பாராதவிதமாக இந்த ரப்பர் வாத்து வெடித்தது.

இதனைப் பார்க்கவந்த பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹுவாங் ஜிங் டை, இதற்கான காரணத்தை ஆராய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கழுகுகள் இந்த வாத்தின் மீது அமர்ந்திருந்ததைப் பார்த்ததாகக் கூறிய பார்வையாளர் ஒருவர், அதுகூட வாத்து உடைந்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.