இந்த ஆண்டு அபிவிருத்தியை நோக்கிய பயணமாக அமையும் – ஜனாதிபதி

Written by vinni   // January 1, 2014   //

mahindarajapaksheமலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அபிவிருத்திக்கான ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பெருமையுடன் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். மிகுந்த அர்ப்பணத்துடன் நாம் அபிவிருத்தி தசாப்தத்தில் காலடியெடுத்து வைத்துள்ளோம்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக பாதைகள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அலங்காரம் போன்றவற்றின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்து வருகின்றார்கள்.

பிறந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தித் தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கான வாயில்களைத் திறக்கின்றது. இதன்மூலம், நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலத்தில் இன்னும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் எம்மீது நம்பிக்கை வைப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

பிறந்திருக்கும் இப்புத்தாண்டு பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் துறையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஆண்டாகும். தேசிய ஐக்கியம், சமாதானம், மனநிறைவு ஆகியவற்றைப் பேணிய நிலையிலேயே நாம் இத்திசையில் முன்னோக்கிச் செல்கிறோம். எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் உண்மையான தேசிய முன்னேற்றத்திற்கும் இதுவே சரியான பாதை என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் எல்லா வகையான வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். இதன் விளைவாகவே ஒரு புதிய அரசியல் மற்றும் அபிவிருத்திக் கலாசாரம் ஏற்படும். இதனை மேலும் உறுதிப்படுத்திய நிலையிலேயே நாம் இப்புத்தாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும். எமது மக்களுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பெற்றுக் கொடுத்த நாம் அவர்களுக்கு அபிவிருத்தியையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொடுக்க அர்ப்பணத்துடன் உள்ளோம்.

பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தேசத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.