மன்மோகன் பதவி விலகுகிறாரா? பிரதமர் அலுவலகம் மறுப்பு

Written by vinni   // January 1, 2014   //

manmohanமக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. “மன்மோகன் சிங் தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்வார்’ என்று பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். கடந்த 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வழிவிடும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பதவி விலகப்போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

மேலும், அண்மையில் நடைபெற்ற 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சி கருதுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், “பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை கூறியது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பதவிக்காலத்தை பிரதமர் மன்மோகன் சிங் முழுமையாக பூர்த்தி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர் என்றும் அவரது தலைமையின் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறேன்’ என்று கடந்த செப்டம்பர் மாதம் ரஷியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பிய போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

சவாலான சந்திப்பு: விலைவாசி உயர்வு, ஊழல் குற்றச்சாட்டுகள், பணவீக்கம், அரசு கொள்கைகளில் குறைபாடு, தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மத்திய அரசு சந்தித்துவரும் வேளையில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு சவால் நிறைந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் அளிக்க உள்ள பதில்கள் எதிர்க்கட்சி உள்பட அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மக்களவைக்கு தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகளை விளக்கி அறிக்கை வெளியிடவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அடிப்படை ஆதாரமற்றது
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகப்போவதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ள நேரத்தில் இதுபோன்ற செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருவது சரியானதல்ல. இந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது’ என்றார்.


Similar posts

Comments are closed.