தமிழக மீனவர் விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Written by vinni   // December 31, 2013   //

Jayalalitha-writing-letterஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், இந்த மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படை 6 தடவை நடுக்கடலில் அத்துமீறி வந்து தமிழக மீனவர்களை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது. தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் நடைபெறும் இந்த சம்பவங்கள் தமிழக மீனவ சமுதாய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஜலசந்தியில் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதார உரிமை உள்ளது. அதை இலங்கை மீண்டும், மீண்டும் சட்ட விரோதமான முறையில் தடுத்து வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை, தவறான இலங்கைக்கு தாரை வார்த்து செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக தமிழக மீனவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு பலவீனமாக இருப்பதே, இலங்கை கடற்படையினர் துணிச்சல் பெற்று தமிழக அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ந்து கொடூர தாக்குதல்களை நடத்த முக்கியக் காரணமாகும்.

ான் உங்களுக்கு எழுதிய முந்தையக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளது போன்று, அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத் துறை மூலம் அழைத்து நமது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதோடு இந்த பிரச்சினையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதற்கும் முடிவு கட்ட வேண்டும்.

தமிழக மீனவ அமைப்புகளின் விருப்பம் மற்றும் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என்ற அவர்களின் உணர்வினை ஏற்று தமிழ்நாடு அரசு 23–12–2013 அன்று எழுதிய கடிதத்தில் தமிழக–இலங்கை மீனவர்களிடையிலான அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையை சென்னையில் வரும் 20–1–2014 அன்று நடத்துவது என்று பரிந்துரை செய்துள்ளது. அந்த பேச்சு வார்த்தையின்போது பேசப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை இந்திய அரசுக்கு ஏற்கனவே தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசும் இதை ஏற்றுக் கொண்டதாக பத்திரிக்கைளில் செய்தி வெளியானது. என்றாலும் இந்திய அரசிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு ஒருமித்த அணுகுமுறையில் ஈடுபட்டுள்ள நிலையில் நமது மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சட்ட விரோதமாக கடத்தப்படுவதும் மோசமான நடவடிக்கையாகும். இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் அது இரு நாட்டு மீனவ அமைப்புகளின் பேச்சுவார்த்தைக்கு ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்காது.

எனவே, இந்திய அரசு உடனே இதில் தலையிட்டு, வலுவான நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை சிறைகளில் உள்ள 256 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தூதரக மட்டத்தில் தொடர்பு கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் 81 மீன் பிடி படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.


Similar posts

Comments are closed.