தேவயாணி விவகாரம்: இறங்கியது அமெரிக்கா!

Written by vinni   // December 31, 2013   //

Devyani-Khobragade-PTIஅமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே கடந்த 12ம் திகதி கைது செய்யப்பட்டு, அவர் ஆடைகளை களைந்து சோதனையிடப்பட்டார்.
விசா மோசடியில் ஈடுபட்டதாகவும், தனது பணிப்பெண்ணுக்கு குறைவான ஊதியம் வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த இந்தியா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சலுகைகளை பறித்தது.

வியன்னா பிரகடனத்தின்படி, தூதரக அதிகாரிகளுக்கு கைதாவதில் இருந்து சிறப்பு விலக்குரிமை உள்ளது. ஆனால், தேவயானி அந்த அந்தஸ்தை முழுமையாக பெறவில்லை என்று அமெரிக்கா கூறியது. இதையடுத்து, தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதரகத்தில் இந்தியா பணி அமர்த்தியது.

ஆயினும், முன்திகதியிட்டு, சிறப்பு விலக்குரிமையை பெற முடியாது என்று அமெரிக்கா கூறியது. அதற்கு இந்தியா, கடந்த ஆகஸ்டு மாதமே தேவயானியை ஐ.நா. பணியில் நியமித்து விட்டதால், அவர் கைதானபோது, சிறப்பு விலக்குரிமையை பெற்றிருந்தார் என்று விளக்கம் அளித்தது.

இந்த பிரச்சினையால் இருநாட்டு உறவு பாதிக்கப்படக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவும் கருதியது.

இதையடுத்து, அமெரிக்கா இறங்கி வந்தது. தேவயானி கைது விவகாரத்தில் நடந்த குளறுபடிகளை கண்டறிய அமெரிக்க அரசுத்துறைகள் அடங்கிய குழுவை அமெரிக்கா அமைத்தது.

தேவயானி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை, நீதித்துறை, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரிகள், இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் மறுஆய்வு அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு சரி என்பதையே அமெரிக்காவின் அறிவிப்பு காட்டுகிறது. அமெரிக்கா, தனது தவறை உணர்ந்து விட்டதாக தோன்றுகிறது. இது நல்ல திருப்பம் ஆகும் என இந்திய மத்திய அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டின் விசா விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிரீத் பராரா தவறாக புரிந்து கொண்டுள்ளார். விசா விண்ணப்பத்தில், தேவயானியின் மாத சம்பளம் 4,500 டொலர் என்று எழுதப்பட்டு இருக்கிறது.

அதை சங்கீதாவுக்கு கொடுக்க சம்மதித்த சம்பளம் என்று அட்டர்னி ஜெனரல் தவறாக புரிந்து கொண்டுள்ளார். எனவே, குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறான யூகத்தின் அடிப்படையில் தொடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.