சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம்

Written by vinni   // December 31, 2013   //

rathiசுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், சிறிலங்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சிறிலங்கா வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் தங்கியுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.அவரது நடவடிக்கைகளை சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற போதிலும், சுற்றுலா நுழைவிசைவில் வந்து அரசியல் நவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நாட்டைவிட்டு அவரை வெளியேற்ற சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது.

அவ்வாறு அவர் நாடுகடத்தப்படுவதை , புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் விரும்புவதாகவும், அதனை சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வர் என்றும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, ராதிகா சிற்சபேசன் போன்று, புலம்பெயர் தமிழர்களுக்கு நெருக்கமான வெளிநாட்டு அரசியல்வாதிகள், மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.


Similar posts

Comments are closed.