தொடரும் இங்கிலாந்தின் தோல்வி: அவுஸ்திரேலியா அபார வெற்றி

Written by vinni   // December 29, 2013   //

australian_flag_3இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் நான்காவது டெஸ்டில், ரோஜர்ஸ் அசத்தல் சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடர நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று போட்டியில் வென்ற அவுஸ்திரேலியா 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.

இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், மெல்போர்னில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255, அவுஸ்திரேலியா 204 ஓட்டங்களை எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 179 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 231 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை எடுத்திருந்தது.

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு, வார்னர் (25) நிலைக்கவில்லை. தொடர்ந்து ரோஜர்சுடன் ஜோடி சேர்ந்த வாட்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய ரோஜர்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இவர் 116 ஓட்டங்களை எடுத்த போது பனேசர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எதிர்முனையில் தன்பங்கிற்கு அரைசதம் எட்டிய வாட்சன் தொடர்ந்து ரன்வேட்டை நடத்த, அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 231 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Similar posts

Comments are closed.