ஜெனீவா மாநாடு குறித்து இலங்கை அச்சத்தில் உள்ளது – மகா. தமிழ் பிரபாகரன்

Written by vinni   // December 29, 2013   //

tamil_prabakaran_CIஇலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ் பிரபாகரன் நேற்று (28) இரவு 8.30 அளவில் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை படம் பிடித்ததாகக் கூறி தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

சுற்றுலாவுக்கான விசாவில் இலங்கை வந்து, விசா விதிமுறைகளை மீறியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் விளக்கம் அளித்தது.

ஆனால், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தான் செல்லவில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்றதாகவும் தமிழ் பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், துப்பாக்கி முனையில் தான் கைது செய்யப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

´நான் இலங்கையில் உள்ள வடகிழக்கு மாகாணங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தேன். அப்போது சாதாரணமாக அங்குள்ள இடங்களை படம் எடுத்தேன். எந்த பகுதியிலும் நான் அத்துமீறி செயல்படவில்லை. படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் என்னை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது நான் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளன் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் கைவிலங்கிட்டு சிறையில் அடைத்தனர். 2 நாட்களாக என்னை தூங்க விடாமல் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவில் இருந்து தமிழர்கள் யார் சென்றாலும் அவர்களை விடுதலைப்புலிகளாகவே பார்க்கிறார்கள். அங்கு இந்தியர்கள் என்றாலே மரியாதை கிடையாது. மேலும் பல உண்மை விஷயங்களை ஓரிரு நாட்களில் உங்களிடம் தெரியப்படுத்துவேன்.

எனது கைது குறித்து இலங்கை உலக நாடுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஜெனீவாவில் தமக்கு சிக்கல் ஏற்படும் என்ற காரணத்திற்காகவே என்னை கைது செய்தனர். நீ ஜெனீவா செல்வாயா என அடிக்கடி கேள்வி எழுப்பினர்´ என்றார்.


Similar posts

Comments are closed.